இந்தியா

கேரள எம்.எல்.ஏ, பாஜக தலைவர் வீடுகளில் குண்டு வீச்சு!

கேரள எம்.எல்.ஏ, பாஜக தலைவர் வீடுகளில் குண்டு வீச்சு!

webteam

சபரிமலை விவகாரத்தில் கேரள மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., பாஜக தலைவர் வீடுகளில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இதையடுத்து போலீசார் 20 பேரை கைது செய்துள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, கேரளாவில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் கேரளாவை சேர்ந்த 2 பெண்கள் சபரிமலை கோயிலில் சாமி தரிசனம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதைக் கண்டித்து இந்து அமைப்புகள் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தின. இதில் பல இடங்களில் வன்முறை வெடித்தன.

இந்நிலையில், கண்ணூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. ஷம்சீர் வீடு மீது நேற்றிரவு நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது.  இது ஆர்.எஸ். எஸ்  மற்றும் இந்து அமைப்பினரின் திட்டமிட்ட சதி என்றும் மாநிலத்தில் அமைதியை குலைக்க இதுபோன்று செயல்படுகிறார்கள் என்றும் அவர் புகார் கூறினார்.

இதன் பின் சில மணிநேரங்கள் கழித்து நடந்த பதில் தாக்குதலில், கண்ணூரில் உள்ள பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் முரளிதரன் வீடு மீதும் வெடிகுண்டு வீசப்பட்டது.  இதில் யாரும் காயமடையவில்லை. இந்த சம்பவத்துக்கு மார்க்சிஸ்ட்தான் காரணம் என்று தெரிவித்துள்ளார். 

இதேபோன்று தலச்சேரி பகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளரான பி. சசி வீட்டிலும் வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இந்நிலையில், ஷம்சீர் வீடு மீது வெடிகுண்டு வீசிய விவகாரத்தில் 20 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.