இந்தியா

நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும் சந்திரயான் 2!

நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும் சந்திரயான் 2!

webteam

புவி வட்டப் பாதையில் இருந்து வெளியேறிய சந்திரயான் 2 செயற்கைக்கோள், காலை 9:30 மணிக்கு நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது.

நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்ய இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் கடந்த ஜூலை 22ம் தேதி ஏவப்பப்பட்டது சந்திரயான் 2 செயற்கைக்கோள். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து புறப்பட்ட சந்திரயான் 2, முதலில் புவி வட்டப்பாதையில் வட்டமடித்தது. அதன்பின் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி, புவி வட்டப்பாதையில் இருந்து விடுபட்டு, நிலவின் வட்டப்பாதையை நோக்கிப் பயணித்தைத் தொடங்கியது. இந்தப் பயணம் இன்று காலை 9:30 மணியோடு நிறைவடைகிறது. அதன்பிறகு சந்திரயான் 2 செயற்கைக்கோள் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் பயணித்து, நிலவைச் சுற்றி வரும்.

நிலவின் வட்டப்பாதையில் சுற்றப் போகும் சந்திரயானின் பயணத்தைத் துல்லியமாக்க, ஆகஸ்ட் 21, 28, 30 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து சந்திரயானின் பாதை திருத்தியமைக்கப்படும். செப்டம்பர் 1ம் தேதிக்குப் பிறகு நிலவைக் குறைந்தபட்சம் 114 கிலோ மீட்டர், அதிகபட்சம் 128 கிலோ மீட்டர் என்கிற தூரத்தில் சுற்ற ஆரம்பித்தவுடன், ஆர்பிட்டரில் இருந்து செயற்கைக்கோள் பிரிந்து நிலவின் தரைப் பகுதியை நோக்கிப் பயணிக்கும்.

சந்திரயான், நிலவின் தரைப்பகுதியை அடைவதற்கு முன்பான 15 நிமிடங்கள் மிக மிக முக்கியமானது மற்றும் சவாலானது என்பதே விஞ்ஞானிகளின் கருத்தாக இருக்கிறது. இதற்குக் காரணம், இந்திய விஞ்ஞானிகள் முதன்முறையாக இந்தப் பணியை மேற்கொள்கிறார்கள் என்பதே ஆகும்.

நிலவின் தரைப் பரப்பை நோக்கிப் பயணிக்கும்போது 400 மீட்டர் உயரத்தில் செயற்கைக்கோள் 12 நொடிகள் அந்தரத்தில் நின்று, சில ஆராய்ச்சிகளை மேற்கொண்டு தகவல்களைச் சேகரித்துக்கொள்ளும். பிறகு மீண்டும் நிலவின் தரையை நோக்கிப் பயணிக்கும். தரையை நெருக்கும்முன் 100 மீட்டர் உயரத்தில் செயற்கைக்கோள் 25 நொடிகள் அந்தரத்தில் நின்று, திட்டமிட்ட இடத்தில் இறங்குவது சரியானதுதானா? என்பதனைத் தீர்மானிக்கும்.

அப்படி இல்லையென்றால் மாற்றுப் இடத்தில் இறங்குவது குறித்து முடிவெடுக்கும். தரையைத் தொடுவதற்கு 10 மீட்டர் இருக்கும் பட்சத்தில், 13 நொடிகள் அந்தரத்தில் மிதந்து பணிகளைச் செய்யும். லேண்டர் விக்ரம் தன்னுடைய 4 கால்களால் தரையைத் தொட்டதும் அதற்குள் இருக்கும் ரோவர் பிரக்யான் வெளியில் வந்து, புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பும்.

தற்போதுவரை சந்திரயான் 2 திட்டத்தில் அனைத்தும் திட்டமிட்டபடியே நடந்துகொண்டிருக்கின்றன என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திருப்பது சந்திரயான் 2-வின் வெற்றி நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதையே உணர்த்துகிறது.