இந்தியா

தாக்குதலில் காயமடைந்த நக்சலைட்டுக்கு ரத்தம் கொடுத்த சிஆர்பிஎஃப் வீரர்கள்

தாக்குதலில் காயமடைந்த நக்சலைட்டுக்கு ரத்தம் கொடுத்த சிஆர்பிஎஃப் வீரர்கள்

webteam

ஜார்க்கண்ட்டில் நடந்த தாக்குதலில் காயமடைந்த பெண் நக்சலைட்டின் உயிரைக் காப்பாற்ற, மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள், ரத்த தானம் செய்தனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பம் (West Singhbhum ) மாவட்ட வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நாசவேலையில் ஈடுபடப்போவதாக மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கூடுதல் கண்காணிப்பாளர் மனிஷ் ராமன் தலைமையிலான வீரர்கள், வனப் பகுதியைச் சுற்றி வளைத்தனர். அப்போது, ஹண்டே ஹோன்காஹா என்ற நக்சலைட் தலைமையில் 24 பேர் அங்கு கூடியிருந் தனர். அவர்களைக் கண்டதும் சரணடையும்படி வீரர்கள் எச்சரித்தனர். ஆனால், அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். 

இதற்கு மத்திய ரிசரவ் போலீஸ் படை வீரர்கள் பதில் தாக்குதல் கொடுத்தனர். இதையடுத்து, நக்சல்கள் தப்பி ஓடினர். பின்னர் அந்தப் பகுதியில் நடத்திய சோதனையில் ஒரு பெண் நக்சலைட், ரத்த வெள்ளத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக அவரை மீட்ட வீரர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.

உயிருக்குப் போராடிய அந்த பெண் நக்சலைட்டுக்கு ரத்தம் தேவைப்பட்டதால் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் 3 பேர், ரத்த தானம் செய்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சைபாசா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.