இந்தியா

குஜராத் கனமழை: வெள்ளத்தில் நகருக்குள் அடித்து வரப்பட்ட முதலை!

ச. முத்துகிருஷ்ணன்

குஜராத்தில் கொட்டி வரும் கனமழை காரணமாக தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளம் பாதித்த பகுதிகளில், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். இதுவரை 31 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பத்திரமாக மீட்கப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கட்ச், சவுராஷ்டிரா ஆகிய பகுதிகளில் பொழியும் அதி கனமழையாலும் வெள்ள பாதிப்புகளாலும் 14 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் வதோதரா நகர்ப்புறப்பகுதிகளில் முதலை ஒன்றின் நடமாட்டம் காணப்படுவதாக தகவல் பரவியது. மீட்புப் படையினர் வந்து சோதனையிட்டதில் வதோதராவின் புஜா கார்டன் பகுதியில் முதலை ஒன்று மீட்கப்பட்டது. வதோதராவின் விஸ்வாமித்ரா நதியில் நூற்றுக்கணக்கான முதலைகள் வாழ்கின்றன. வெள்ளத்தில் அந்த ஆற்றிலிருந்து இந்த முதலை நகருக்குள் நுழைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.