NEET issue in SC and Parliament PT Web
இந்தியா

நீட் வினாத்தாள் கசிவு | நாடாளுமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நடந்த காரசார விவாதங்கள்!

ஜெனிட்டா ரோஸ்லின்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாள் இன்று காலை தொடங்கியது. இதில் பங்கேற்ற எதிர்க்கட்சிகள் நீட் முறைக்கேடு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அந்தவகையில், தமிழ்நாடு திமுக எம்பியான கலாநிதி வீராசாமி, “தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும். அனைத்து மாநிலங்களுக்கும் தங்களின் முறைப்படி தேர்வு நடத்தி மாணவர்களை கல்லூரிக்கு தேர்ந்தெடுக்க அதிகாரம் தேவை. இதற்காக மத்திய அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?” என்று கேள்வி எழுப்பினார். இதனை தொடரந்து, காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், அகிலேஷ் யாதவ் ஆகியோரும் இதே கேள்வியை எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவிக்கையில், “நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறுகிறது. நீட் தேர்வு குறித்து முடிவு எடுக்கப்பட்ட போது, காங்கிரஸ்தான் மத்தியில் ஆட்சியில் இருந்தது.

தற்போது நடந்த நீட் தேர்வை பொறுத்தவரை, வினாத்தாள் கசிவுக்கு ஆதாரம் இல்லை. உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முன்பு நீட் முறைகேடு புகார் தொடர்பான வழக்கு நடைபெறுகிறது. நீட் தேர்வு அவசியம் என உச்சநீதிமன்றமே இரண்டு முறை தெரிவித்துள்ளது. நீட் விவகாரத்தில் எதையும் நாங்கள் மறைக்கவில்லை.சிபிஐ விசாரணை நடைபெறுகிறது” என்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி “தவறுகளை மத்திய அரசு வேறு பக்கம் திருப்ப பார்க்கிறது. நமது தேர்வு முறையில் மிகப்பெரிய தவறுகள் இருக்கின்றன. வினாத்தாள் கசிவு மிகவும் கவலைக்குரியது” என்று கூறினார்.

பரபரப்பாக இது ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, இன்று காலை 10.30 மணி அளவிலிருந்தே உச்சநீதிமன்றத்தில் நீட் முறைக்கேடு தொடர்பாக வழக்கு நடைபெற தொடங்கியது. குறிப்பாக இன்று நாடாளுமன்றத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “நீட் வினாத்தாள் கசிந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை” என்று தெரிவித்திருந்த சூழலில், அதற்கு எதிர்மறையான கருத்துகளை உச்சநீதிமன்றம் முன்வைத்துள்ளது.

இது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தெரிவிக்கையில், “தரவுகள் அடிப்படையில் பார்த்தால் பாட்னா உள்ளிட்ட 2 இடங்களில் வினாத்தாள் கசிந்தது உறுதியாகியுள்ளது. நீட் வினாத்தாள் கசிவு இந்த இரண்டு இடங்களில் மட்டும்தான் உள்ளதா? இல்லை நாடு முழுவதும் பரவியுள்ளதா? என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவிதார்.

இதற்கு மனுதார தரப்பிலும், ஒரு சில கேள்விகளை முன்னெடுத்து வைக்கப்பட்டன. அதில், “வினாத்தாள் அச்சடிக்கப்படுவது யாருக்கும் தெரியாது என்று தெரிவிக்கிறார்கள். எனில், அச்சடிக்கப்பட்ட இடங்களிலிருந்து வினாத்தாள் கசிந்துள்ளதா என்பது நமக்கு எப்படி தெரியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து அந்த வழக்கு நடக்கும் நிலையில் இது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.