இந்தியா

மம்தா கட்சியில் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி... 'ஐபேக்' கொடுத்த ஐடியா?

மம்தா கட்சியில் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி... 'ஐபேக்' கொடுத்த ஐடியா?

webteam

கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி இன்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து அவரது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி. சமீப காலமாக இந்திய அணியிலும், ஐபிஎல் தொடரிலும் இடம்பிடிக்க முடியாமல் இருந்து வருகிறார். எனினும், சமீப காலமாக அரசியல் பக்கம் கவனம் செலுத்த தொடங்கினார். குறிப்பாக மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார். விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பாப் பாடகி ரியானா கருத்து தெரிவித்தபோது, மற்ற பிரபலங்கள் அரசுக்கு ஆதரவாக தங்கள் கருத்தை தெரிவிக்க, அதற்கு எதிர்க்கருத்து தெரிவித்த ஒரு சில பிரபலங்களில் மனோஜ் திவாரியும் ஒருவர். அதேபோல் பெட்ரோல் விலை ஏற்றத்தை கண்டித்து உரக்க குரல் கொடுத்தார் மனோஜ்.

மனோஜ் திவாரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "பெட்ரோல் இதுவரை பார்த்திராத வகையில் பிரமாதமான இன்னிங்ஸை விளையாடியிருக்கிறது. இந்தக் கடினமான சூழலிலும் கச்சிதமாக விளாசப்பட்ட சதம் இது. முதல் பந்தில் இருந்தே பெரிய இன்னிங்ஸை தொடும் என எதிர்பார்த்தோம். பெட்ரோலுக்கு டீசல் அளித்துள்ள பார்ட்னர்ஷிப்பும் அபாரம். சாமானிய மக்களுக்கு எதிராக விளையாடுவது எளிதல்ல. ஆனால், நீங்கள் (பெட்ரோல், டீசல்) இருவருமே அதை சாத்தியப்படுத்தியிருக்கிறீர்கள்" என நக்கலாக பதிவிட்டார்.

தொடர்ந்து இப்படி பாஜக எதிர்ப்பு நிலையில் இருந்த மனோஜ் திவாரி அரசியலில் களம் காணப்போகிறார் என யூகங்கள் கிளம்பியது. தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது. ஆம், மேற்கு வங்கத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்துவிட்டார். முதலில் இதனை மனோஜ் திவாரியே உறுதிப்படுத்தினார். முதல்வர் மம்தா பானர்ஜி இன்று மாநிலத்தில் நடத்த இருக்கிற பேரணியில் அவரை சந்தித்து கட்சியில் இணைந்தார்.

முன்னதாக, இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், தனது புதிய பயணம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். ``ஒரு புதிய பயணம் இன்று முதல் தொடங்குகிறது. உங்கள் அன்பும் ஆதரவும் தேவை" என்று ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் பகிர்ந்துள்ளார். அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பயோவில், `அரசியல்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், பெருமைமிகு இந்தியன், ஜெய் பங்களா" போன்ற சொற்றொடர்கள் இடம்பெற்றுள்ளன.

கிரிக்கெட் வீரர் லக்‌ஷ்மி ரத்தன் சுக்லா சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். தற்போது அவரின் இடத்துக்கு மனோஜ் திவாரி பொருத்தமாக இருப்பார் என்று திரிணாமுல் வட்டாரங்கள் 'தி குவின்ட்' செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளன. ஹவுராவில் திரிணாமுல் கட்சியின் மாவட்டத் தலைவராக இருந்த சுக்லா, சமீபத்தில் கட்சி மற்றும் அமைச்சர் பதவியில் இருந்து விலகி விளையாட்டுகளில் கவனம் செலுத்தப்போவதாக அறிவித்தார். மேலும் இனி அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்றும் கூறினார்.

இதனையடுத்துதான், நான்கு வாரங்களுக்கு முன்பு மனோஜ் திவாரியை திரிணாமுல் மூத்த தலைவர்கள் சந்தித்து அரசியலுக்கு வர அழைப்பு விடுத்திருக்கின்றனர். அந்த அழைப்பின் பேரில் தற்போது கட்சியில் இணைந்திருக்கிறார்.

மனோஜ் திவாரியை திரிணாமுல் சேர்ப்பது தொடர்பான நடவடிக்கைக்கு பின்னால் இருப்பது, பிரசாந்த் கிஷோரின் 'ஐபேக்' என்று அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். வரவிருக்கும் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கான திரிணாமுல் காங்கிரஸின் பிரசாரத்தைக் கையாளும் பிரசாந்த் கிஷோரின் 'ஐபேக்' இதற்கான சந்திப்புகளையும் ஏற்பாடு செய்தது என்றும் கூறியிருக்கிறார்கள்.