டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை ஏற்க முடியாது என்ற முடிவை பெட்ரோல் விற்பனை நிலையங்கள் வரும் 13ம் தேதி வரை ஒத்திவைத்துள்ளன.
இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று இம்முடிவை பெட்ரோல் விற்பனையாளர்கள் அறிவித்துள்ளனர். பெட்ரோலிய விற்பனை முகவர்களின் கோரிக்கை குறித்து எண்ணெய் நிறுவன உயரதிகாரிகள் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசினர். பணப் பரிமாற்ற கட்டண பிரச்னையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுமாறு வங்கிகளையும் எண்ணெய் நிறுவனங்களையும் அவர் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக இன்று முதல் பெட்ரோல் பங்க்குகளில் டெபிட், கிரெடிட் கார்டுகளை ஏற்க முடியாது என பெட்ரோல் விற்பனையாளர்கள் அறிவித்திருந்தனர். டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் பெட்ரோல், டீசல் விற்கும் போது விதிக்கப்படும் ஒரு சதவிகிதம் வரையிலான பரிமாற்ற கட்டணத்தை தாங்களே ஏற்க வேண்டியிருப்பதால் இழப்பு ஏற்படுவதாக அவர்கள் கூறியிருந்தனர்.