மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக கடந்த 2010 ஆண்டில் இருந்து நாடு முழுவதும் தாக்குதல்களும், வன்முறைச் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றபின் பசு பாதுகாவலர்கள் எனும் போர்வையில் சிலர் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மஹாராஷ்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்பின் ஹரியானாவிலும் மாட்டிறைக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து, மாட்டிறைச்சி வைத்திருந்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என அம்மாநில அரசுகள் சட்டம் இயற்றின. 2015 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம், நாகர் பகுதியில் இறைச்சிக்காக மாடுகளை கொன்றதாக அப்துல் குரேஷி என்பவர் கொலை செய்யப்பட்டார். 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் 28 ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் தாத்ரியில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக முகமது அக்லக் என்பர் கடுமையாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அதே ஆண்டு அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் உதாம்பூர் பகுதியில் பெட்ரொல் குண்டு வீசி ஒருவர் கொல்லப்பட்டார்.
2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் கிர்கியா ரயில் நிலையத்தில், மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கணவன் மனைவி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதே ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் லதேகர் பகுதியில் இறைச்சிக்காக மாடுகளை கொண்டு சென்றதாக மஜ்லூம், அன்சாரி, இம்தியாஸ் என்ற 3 இளைஞர்களை பசுப் பாதுகாவலர்கள் சிறைபிடித்தனர். கொடூரமாக தாக்கப்பட்ட அவர்கள் மூவரும் தூக்கிலிட்டு கொல்லப்பட்டனர். 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி ஹரியானா மாநிலத்தில் இறைச்சிகாக மாடுகளை கொண்டு சென்றதாக முஸ்தீன் அப்பாஸ் என்பவர் கொலை செய்யப்பட்டார்.
2016 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி, ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கர் பகுதியில், மாட்டிறைச்சி வைத்திருந்ததாக தலித் இளைஞர்கள் 5 பேர் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்டனர். 2016 ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் தேதி ஹரியான மாநிலம் குர்கானில் மாட்டிறைச்சி விவகாரத்தால் தாக்கப்பட்ட 2 பேரை, காட்டாயப்படுத்தி மாட்டு சாணத்தை உண்ண வைத்துள்ளனர். 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் தேதி குஜராத் மாநிலம் உனாவில் மாட்டுத் தோலை உரித்ததாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொடூரமாக தாக்கப்பட்டனர். 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி கர்நாடக மாநிலம் உடுப்பியில் பாஜக தொண்டர் ஒருவரே பசுப் பாதுகாவலர்களால் கொலை செய்யப்பட்டார்.
2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி ஹரியானா மாநிலம் மேவாவில் மாடுகளைக் கொன்றதாக கூறி, இஸ்லாமிய தம்பதி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் ஏராளமானவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி, அசாமில் இருவர் கொலை செய்யப்பட்டனர். 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் தேதி டெல்லி அருகே மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக 4 பேர் தாக்கப்பட்டனர்.
2017ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதியில் உஸ்மான் அன்சாரி என்பவரின் வீட்டின் அருகே பசுவின் தலை இருந்ததால் அவரது வீடு தீக்கிரையாக்கப்பட்டது. கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக இதுவரை நாடு முழுவதும் 28 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 30க்கும் மேற்பட்ட இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 124 நபர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.