இந்தியா

கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை

கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை

webteam

கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை உயர்வை 'சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா' அறிவித்துள்ள நிலையில், இனி இந்த தடுப்பூசிக்கு பொதுமக்கள் கூடுதல் செலவிட நேரிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இதுவரை இருந்த விலை விவரம் குறித்தும், புதிய விலை அறிவிப்பு ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றியும் சற்றே விரிவாகப் பார்ப்போம்.

'சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா' நிறுவனத்தின் உரிமையாளர் ஆதார் பூனாவாலா புதன்கிழமை அளித்த தகவல்படி, கோவிஷீல்டு தடுப்பூசி மாநில அரசுகளுக்கு 400 ரூபாய்க்கும், தனியார் நிறுவனங்களுக்கு 600 ரூபாய்க்கும் விற்கப்படும். மத்திய அரசுக்கு இதுவரை ஒரு தடுப்பூசி 150 ரூபாய் என்ற விலையில் கோவிஷீல்டு விற்கப்பட்டிருந்தாலும், இனிமேல் மத்திய அரசும் 400 ரூபாய்க்குதான் கொள்முதல் செய்யவேண்டும் என பூனாவாலா விளக்கியுள்ளார்.

இதுவரை அரசு மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களில் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்திக்கொள்வோர் 250 ரூபாய் கட்டணம் செலுத்துகின்றனர்.

அரசு மானியம்...

இனி பொதுமக்கள் தடுப்பூசிக்கு 400 ரூபாய் அல்லது 600 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியிருக்குமோ என்று சந்தேகம் எழுந்த நிலையில், அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து இலவச தடுப்பூசி பணி தொடரும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது எப்படி சாத்தியமாகும்?

கோவிஷீல்டு தடுப்பூசியை 400 ரூபாய்க்கோ அல்லது 600 ரூபாய்க்கோ மத்திய, மாநில அரசுகள் கொள்முதல் செய்தாலும் பொதுமக்களுக்கு சுமை இல்லாதவகையில் மானியம் அளித்து, இலவச தடுப்பூசி பணியை தொடரலாம். இந்த மானியத்தை மத்திய அரசோ அல்லது மாநில அரசோ முழுவதும் ஏற்றுக்கொள்ளலாம் அல்லது பகிர்ந்து கொள்ளலாம். ஏற்கெனவே பல அரசியல் தலைவர்கள் இலவச தடுப்பூசி பொதுமக்களுக்கு கிடைக்கும் என உறுதி அளித்துள்ளனர்.

இதுவரை குறைந்த விலை எப்படி?

கோவிஷீல்டு இந்தியாவில் பயன்பாட்டுக்கு தயாராக இருந்த நிலையில், மத்திய அரசு 10 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கு மொத்தமாக ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும், அதனால் ஒரு தடுப்பூசி சராசரி 150 ரூபாய்க்கு மத்திய அரசுக்கு அளிக்க ஒப்புக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார் பூனாவாலா. அந்த சமயத்தில் சோதனைகள் நடந்துவந்த நிலையில், சீரம் இன்ஸ்டிடியூட் தடுப்பூசி வெற்றிபெறும் என உத்தரவாதம் இல்லாத நிலையிலும், மத்திய அரசு 10 கோடி கோவிஷீல்டு கொள்முதல் செய்வதாக ஒப்பந்தம் செய்ததால் குறைந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மத்திய அரசுக்கு அளித்ததை விட அதிக விலையில் சீரம் இன்ஸ்டிடியூட் கோவிஷீல்டு தடுப்பூசியை ஏற்றுமதி செய்துள்ளது என பூனாவாலா தெரிவித்துள்ளார். ஏற்கனவே 9 கோடி தடுப்பூசிகள் மத்திய அரசு கொள்முதல் செய்துள்ள நிலையில், இன்னமும் ஒரு கோடி தடுப்பூசிகள் மத்திய அரசுக்கு சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் தயாரித்து அளிக்க வேண்டும்.

பேரம் பேசி விலையை குறைக்கலாம்...

இனி மாநில அரசுகளும் மற்றும் தனியார் நிறுவனங்களும் தடுப்பூசியை கொள்முதல் செய்து கொள்ளலாம் என கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாநில அரசுகளுக்கு ஒரு தடுப்பூசி 400 ரூபாய்க்கும் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ஒரு தடுப்பூசி 500 ரூபாய்க்கும் விற்கப்படும் என சீரம் இன்ஸ்டியூட் தெரிவித்திருந்தாலும், மாநில அரசுகள் பேச்சுவார்த்தை மூலம் விலையை குறைக்க முயற்சி செய்யலாம்.

மத்திய அரசுக்கு விலை குறைத்ததை போலவே மாநில அரசுகளுக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் விலையை குறைக்கலாம். மக்கள்தொகையை பொறுத்து தேவை இருக்கும் என்பதால், மாநிலங்களின் கொள்முதல் அதிக எண்ணிக்கைகளில் இருக்கும் என்பதால் பேரம் சாத்தியமே.

மொத்தமாக 10 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் அளித்தது தவிர, மத்திய அரசு 'சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா' நிறுவனத்துக்கு ரூ.3,000 கோடி முன்பணம் அளிக்க ஒப்புக்கொண்டுள்ளது. ஆரம்பத்தில் ஒப்பந்தம் அளிக்கப்பட்ட 10 கோடி தடுப்பூசிகள் தவிர, அடுத்த கட்டமாக மேலும் 2 கோடி தடுப்பூசி கொள்முதல் செய்யவும் ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக தடுப்பூசி அளிக்க இப்போது வாய்ப்பு இல்லை என 'சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா' நிறுவனம் தெரிவித்துள்ளதாக மருத்துவமனை பிரதிநிதிகள் தகவல் அளித்துள்ளனர். தனியார் நேரடியாக கொள்முதல் செய்ய தேவைப்படும் விநியோக முறைகளை செயல்படுத்த ஓரிரு மாதங்கள் ஆகும் என கருதப்படுகிறது. மாநில அரசுகள் மூலமே தனியார் நிறுவனங்கள் கோவிஷீல்டு தடுப்பூசியை கொள்முதல் செய்வதற்கான சூழல் அடுத்த சில மாதங்களுக்கு நிலவும் என தெரிகிறது. ஆகவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாநில அரசுகள் பேரம் நடத்தலாம். அல்லது, மத்திய அரசே தடுப்பூசி கொள்முதல் செய்து விநியோகிக்க கோரிக்கை வைக்கலாம்.

போட்டியாக கோவாக்சின்...

கோவிஷீல்டு விலையை குறைக்க முடியாது என சீரம் இன்ஸ்டிடியூட் வற்புறுத்தினால், போட்டி தயாரிப்பாளரான பாரத் பையோடெக் நிறுவனத்தில் கோவாக்சின் தடுப்பூசியை மாநில அரசுகள் கொள்முதல் செய்யலாம். பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு ரூ.1500 கோடி முன்பணம் தர மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

போட்டி அதிகரிக்கும்...

ரஷ்ய நாட்டு தயாரிப்பான ஸ்புட்னிக்-வி விரைவில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் என்பதால் தடுப்பூசி சந்தையில் போட்டி அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் ஒப்புதல் பெற்றுள்ள தடுப்பூசிகளுக்கும் விரைவில் இந்தியாவில் எளிதாக ஒப்புதல் அளிக்க ஏற்பாடுகள் செய்து வருகிறது. ஆகவே நோவாவாஸ், மடானா, பைசர், மற்றும் ஜான்சன் & ஜான்சன் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் விரைவில் இந்தியாவில்
அறிமுகப்படுத்தப்பட வாய்ப்பு எளிதாகிறது.

எல்லாவற்றையும் விட முக்கியமாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் தேவை பலமடங்கு அதிகரிக்கும் என்பதால், மாநிலங்கள் பல கோடி தடுப்பூசிகளை வாங்க ஒப்பந்தம்
செய்து, குறைந்த விலையில் தடுப்பூசி கொள்முதல் செய்ய முயற்சிக்க வாய்ப்பு உள்ளது.

- கணபதி சுப்ரமணியம்