தோட்டத்தில் உள்ள மரத்தடி நிழலில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் : மத்தியபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
இந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் நோய் தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளவர்களுக்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதி கிடைக்காத நிலை உள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் தோட்டத்தில் உள்ள மரங்களின் நிழலில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் வெளியாகி உள்ளது. அதை பார்க்கும் போது மிகவும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.
அந்த மாநிலத்தில் உள்ள அகர் மால்வா மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. மருத்துவமனையில் இடம் இல்லாதது மற்றும் ஊரக பகுதிகளை சேர்ந்தவர்கள் மருத்துவமனையை நாட முன் வராத காரணத்தினால் தோட்டத்தையே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டாக மாற்றியுள்ளனர் மருத்துவர்கள். முழுவதும் மருத்துவ சிகிச்சை முறைக்கு முரணாக மரத்தின் கிளைகளில் குளுக்கோஸ் பாட்டிலை தொங்கவிட்டு, அதன் மூலம் நோயாளிகளுக்கு குளுக்கோஸ் செலுத்தப்பட்டது வருகிறது.
இதனை அரசியல் கட்சியினர் சிலர் விமர்சித்தும் உள்ளனர். அதே நேரத்தில் இந்த செயலை செய்து வரும் மருத்துவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார துறை அதிகாரி மனீஷ் குரில் தெரிவித்துள்ளார்.