இந்தியா

மார்ச் மாதத்தில் 12 - 14 வயது சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி: மத்திய அரசு திட்டம்

மார்ச் மாதத்தில் 12 - 14 வயது சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி: மத்திய அரசு திட்டம்

newspt

12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு வரும் பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை துவங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கொரோனா வைரஸை தடுப்பதற்கான பேராயுதமாக தடுப்பூசி செயல்படுவதாக உலக சுகாதார அமைப்பு முதல் மருத்துவ நிபுணர்கள் வரை பலரும் கூறி வருகின்றனர். இதனால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, தடுப்பூசி செலுத்தும் திட்டம், இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதன்முதலாக மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு துவங்கி வைக்கப்பட்டது.

அதன்பிறகு, 18 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி விரிவாக்கப்பட்டது. கடந்த 3-ம் தேதி முதல் 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டது. ஓராண்டின் நிறைவில், 91 கோடி முதல் தவணையும், 65 கோடி இரண்டாம் தவணையும், 43 லட்சம் பூஸ்டர் தவணையும் செலுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக 156.76 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு வரும் பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை துவங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக கொரோனா தடுப்பு நோய்க்கான, தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர் மருத்துவர் என்.கே.அரோரா கூறுகையில், ‘15 முதல் 18 வயதுள்ளவர்கள் பிரிவில் உள்ள 7.4 கோடி பேரும், ஜனவரி இறுதிக்குள் முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அவர்கள் அனைவருக்கும் பிப்ரவரி இறுதிக்குள் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுவிடும். இந்தத் திட்டத்தில் இதுவரை 3.38 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. ஆகையால், வரும் பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் 12 முதல் 14 வயதுடையோருக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தைத் தொடங்க விரும்புகிறோம்.

12 முதல் 17 வயதில் இருப்போருக்கு தடுப்பூசி செலுத்துவது மிகவும் அவசியம். ஒமைக்ரான் வேகமாகப் பரவும் சூழலில் இந்த வயதினர் பள்ளி, கல்லூரிகள், பயிற்சி மையங்கள் எனப் பல இடங்களுக்கும் சென்று வருவதால், அவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது மிகவும் அவசியம். அதனாலேயே மத்திய அரசு 12 முதல் 17 வயதுடையோருக்குக் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.