சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் இந்தியாவையே அதிரச் செய்தது. மூட நம்பிக்கையின் உச்சத்தால் தன்னுடைய இரு மகள்களையும் நிர்வாணப்படுத்தி அடித்துக்கொன்றனர் பெற்றோர். தந்தை புருஷோத்தம், மகளிர் கல்லூரியில் துணை முதல்வராக உள்ளார். இவரது மனைவி பத்மஜா, தனியார் கல்வி நிறுவனத்தில் பேராசிரியையாக உள்ளார். இந்த தம்பதிகளுக்கு அலெக்கியா (27), சாய் திவ்யா (22) என்ற இரு மகள்கள் உள்ளனர். இத்தம்பதியினர் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக வீட்டில் அற்புதங்கள் நடத்துவதாக இருவரும் பூஜைகள் நடத்தி வந்துள்ளதாக தெரிகிறது.
அந்த பூஜைகளின் ஒருபகுதியாகவே இந்த நரபலி நடந்துள்ளது. அதிகம் படித்த பேராசிரியர் தம்பதி மூடநம்பிக்கையின் உச்சத்தில் தங்களது மகள்களையே நரபலி கொடுத்த சம்பவம் ஆந்திராவில் மட்டுமின்றி இந்தியாவையே அதிரச் செய்தது. ஆனால் அடுத்தடுத்த விசாரணையின்போது பெற்றோரின் விளக்கங்களும், செயல்களும் போலீசாரையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளன.
புருஷோத்தம்-பத்மஜா தம்பதி மூட நம்பிக்கையில் ஊறிபோய் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். விசாரணையின்போது பத்மஜா கூறிய கருத்துகளும், விளக்கங்களும் கேட்போரை அதிரச் செய்கிறது. போலீசாரை பார்த்து கூச்சலிட்ட பத்மஜா, நானே சிவன். சீனாவில் இருந்து வரவில்லை. என்னுடைய உடல் பாகத்தில் இருந்தே கொரோனா வைரஸ் வந்தது. வரும் மார்ச்சிலிருந்து கொரோனா போய்விடும். தடுப்பூசி எல்லாம் வேண்டாம். என்று கூறி கூச்சலிலிட்டுள்ளார். அப்போது அவரை கணவர் புருஷோத்தம் சமாதானப்படுத்த முயற்சித்துள்ளார், அவரைப்பார்த்து கூச்சலிட்ட பத்மஜா, '' இப்போது நீ என் கணவன் இல்லை. நான் சிவன் எனக் கூறியுள்ளார். மேலும் போலீசாரை பார்த்து கூறிய பத்மஜா, எங்கள் மகளின் உடலுக்குள் தீய சக்தி இருந்தது. அப்படி இல்லையென்றால் ஏன், பல மணி நேரம் உயிர் இழுத்துக்கொண்டு கிடந்தது எனவும் கேள்வி எழுப்பினார்.
இப்படி பத்மஜா ஒரு புறம் போலீசாரை அலறவிட, மறுபுறம் அமைதியாக விளக்கமளித்த புருஷோத்தம் ,நான் ஒன்றும் முட்டாளில்லை. பிஹெச்டி முடித்தவன். எங்களுக்கு தகவல் வந்தது. அதன்படி நாங்கள் செய்தோம். எனக் கூறியுள்ளார். உயிரிழந்த இரு மகள்களையும் அவர்கள் மூட நம்பிக்கைக்குள் இழுத்துள்ளனர் என போலீசார் தெரிவித்தனர். சமீபத்தில் அவர்களுடைய ஃபேஸ்புக் பதிவுகளை பார்த்தால், அவர்களும் இதையெல்லாம் நம்பியுள்ளதையே காட்டுகிறது. படித்த, கல்வி அறிவு பெற்ற ஒரு குடும்பமே அதீத மூடநம்பிக்கையில் மூழ்கிகிடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பேசிய புருஷோத்தம்-பத்மஜா வீட்டிற்கும் அருகில் வசிப்பவர்கள், கொரோனா ஊரடங்கு தொடங்கியதில் இருந்தே அவர்கள் வெளியில் யாருடனும் அதிக தொடர்பில் இருக்கவில்லை. வெளி உலகத்தை விட்டு விலகியே இருந்தனர். குறிப்பாக நரபலி சம்பவம் நடந்த தினத்துக்கும் சில நாட்கள் முன்பில் இருந்தே அவர்கள் வீட்டுக்கு பக்கத்தில் யாரையுமே அனுமதிக்கவில்லை. ஏதேதோ மர்மமாக நடந்தது. அது எல்லாம் பூஜைக்கான ஏற்பாடாக இருந்திருக்கும். இந்த கொரோனா ஊரடங்கு நேரத்தில் அவர்களுக்கு மன ரீதியாக பிரச்னை ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்தனர்.
தற்போது தீவிரமாக விசாரனை நடத்தி வரும் போலீசார் முதல்கட்டமாக சில தகவல்களை வெளியிட்டுள்ளனர். குடும்பத்தில் உள்ள அனைவருமே மூடநம்பிக்கையில் இருந்துள்ளனர். இறந்தவர்கள் மீண்டு வருவார்கள் எனபதே அவர்களின் அதீத நம்பிக்கையாக இருந்துள்ளது. கொலை செய்யப்பட்ட மகள்களும் மீண்டு வருவார்கள் என்றே நம்பியுள்ளனர். இடையே போலீசார் வரவில்லை என்றால் தங்கள் இருவரையுமே அவர்கள் மாய்த்துக்கொண்டும் இருப்பார்கள். ஏனென்றால் அவர்களை பொருத்தவரை இறந்தாலும் மீண்டு வருவோம் என்பதே நம்பிக்கை என தெரிவித்துள்ளனர்.