இந்தியா

கொரோனா விரைவுச் செய்திகள் ஏப்.22: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முதல் இலவச தடுப்பூசி வரை

கொரோனா விரைவுச் செய்திகள் ஏப்.22: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முதல் இலவச தடுப்பூசி வரை

webteam

>தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் இருப்பு போதிய அளவு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் ஆக்ஸிஜன் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய முன்வரும் தொழிற்சாலைகளுக்கு உடனடியாக தற்காலிக உரிமம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மே ஒன்றாம் தேதியிலிருந்து 18 முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு இலவச சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி போட உள்ளதாக அறிவித்துள்ளது. தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், உணவகங்களுடன் இணைந்து 100 சதவீதம் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்க ஊக்கப்படுத்தப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. மாவட்டந்தோறும் நோய் பரவல் நிலைக்கேற்ப மருத்துவக் கட்டமைப்பு வசதிகள், ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளையும் ஏற்படுத்தி தேவையான மருந்துகளை வழங்க உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை 60 சதவிகிதத்துக்கும் மேல் ஏற்படுத்துவதே முக்கிய குறிக்கோள் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

>இந்தியாவில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி , கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதலில் மருத்துவர்கள், செவிலியர் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 3ஆவது கட்டமாக 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் மே 1ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு கடந்த திங்கள்கிழமை அறிவித்தது. இந்த நிலையில், 18 வயது நிரம்பியோர், தடுப்பூசி செலுத்த விரும்பினால், வரும் 28ஆம் தேதி முதல் கோவின் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். முன்னதாக 24ஆம் தேதி முதல் முன்பதிவு செய்யலாம் என தகவல் வெளியானது. இந்தியாவில் இதுவரை 13 கோடிக்கும் அதிகமானோர், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

>மேற்கு வங்க தேர்தல் பரப்புரை பயணத்தை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளார். கொரோனா தடுப்பு பணி குறித்த உயர்மட்ட ஆலோசனை காரணமாக மேற்கு வங்க தேர்தல் பரப்புரை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பாஜக தலைவர்களின் தேர்தல் பரப்புரைகளுக்கு விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளவிருந்த பயணத்தை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளார். அதேநேரத்தில் அவர் மெய்நிகர் வழியில் பரப்புரை மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் 8 கட்டடங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று ஆறாம் கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில், வருகிற 26 மற்றும் 29 ஆம் தேதிகளில் 7 மற்றும் 8 ஆம் கட்ட தேர்தல் தேர்தல் நடைபெறுகிறது.

>தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல், தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்து 652 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 12 வயதுக்கு உட்பட்ட 414 சிறார்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரையிலான மொத்த கொரோனா 10 லட்சத்து 37 ஆயிரத்து 711 ஆக அதிகரித்துள்ளது. எனினும் ஆறுதல் அளிக்கும் வகையில் , ஒரேநாளில் 7 ஆயிரத்து 526 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 9 லட்சத்து 34 ஆயிரத்து 966 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 59 பேர் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 317 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 89 ஆயிரத்து 428 ஆக உயர்ந்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 29 ஆயிரத்து 208 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 789 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 906 பேரும், கோவை மாவட்டத்தில் 689 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 510 பேரும், மதுரை மாவட்டத்தில் 495 பேரும், நெல்லை மாவட்டத்தில் 449 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

>கொரோனா பரவல் தடுப்புக்கான வழிமுறைகள் குறித்து, கொரோனாவின் தீவிரம் குறித்தும் தமது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து அறிவுரைகளைக் கூறி வருகிறார் பிரதீப் கவுர். இதன் தொடர்ச்சியாக இன்று பதிவிட்டுள்ள பிரதீப் கவுர், கொரோனாவைவிட நாம் புத்திசாலிகள் என யாரும் எண்ண வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா வைரசுக்கு எதிரான பல்வேறு வழிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகள், பானங்கள், பொடிகள் ஆகிய முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டதாகக் பிரதீப் கவுர் கூறியுள்ளார். எனவே முகக்கவசம், தனிமனித இடைவெளி, கொரோனா தடுப்பூசி ஆகிய வழிமுறைகளை நம்பிக்கையுடன் பின்பற்றுமாறு பிரதீப் கவுர் பட்டியலிட்டுள்ளார்.

>தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி போதிய அளவில் உள்ளதால் அரசு அனுமதியின்றி வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுவதாகவும், வெண்டிலேட்டர் பற்றாக்குறை உள்ளதாகவும் வெளியான செய்திகளின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வு, தாமாக முன்வந்து பொதுநல வழக்காக விசாரணைக்கு எடுத்தது. தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்தை பிற மாநிலங்களுக்கு அனுப்புவது குறித்து பிற்பகலில் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் அதற்கு பதிலளித்த தமிழக அரசு, ரெம்டெசிவிர் மருந்தை பொறுத்தவரை அரசு மருத்துவமனைகளில் 31 ஆயிரம் குப்பிகள் உள்ளதாக கூறியுள்ளது. ஆக்சிஜனை பொருத்தவரை தமிழ்நாட்டில் தினமும் 400 டன் உற்பத்தி செய்யப்படுவதாகவும், ஆயிரத்து 167 டன் ஆக்சிஜன் இருப்பு உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தற்போதைக்கு 250 டன் மட்டுமே தேவை என்பதால், ஆந்திரா, தெலங்கானாவிற்கு 65 டன் ஆக்சிஜன் அனுப்பியதாகவும், அதனால் எவ்வித பற்றாக்குறையும் இல்லை எனவும் விளக்கமளித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 9ஆயிரத்து 600 வென்டிலேட்டர்களில் 5ஆயிரத்து 887 கொரோனா சிகிச்சை பெறுபவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள தமிழக அரசு, தற்போது 84 ஆயிரத்து 621 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், படுக்கை, ஆக்சிஜன், வென்டிலேட்டர் என எதிலும் பற்றாக்குறை இல்லை என திட்டவட்டமாக கூறியுள்ளது. இவற்றை பதிவு செய்த நீதிபதிகள், இதற்காக குழுவை அமைத்து, ஆக்சிஜன், ரெம்டெசிவிர், வென்டிலேட்டர், தடுப்பூசிகள் ஆகியவற்றின் தேவையறிந்து இருப்பை உறுதி செய்யவும், தடுப்பூசி எவ்வளவு உள்ளது என்பது குறித்த விவரங்களை ஏப்ரல் 26ஆம் தேதி தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

>இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கினால், ஆக்சிஜன் உற்பத்தி செய்து இலவசமாக வழங்க தயாராக இருப்பதாக வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது, தற்போது ஆக்சிஜன் தேவை அதிகம் இருப்பதால், எந்த வழியில் யார் உற்பத்தி செய்தாலும் அதனை வாங்க தயாராக இருப்பதாகவும், வேதாந்தா நிறுவனம் உற்பத்தி செய்தால் அதை கொள்முதல் செய்ய தயார் என மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார். உடனடியாக அனுமதி அளித்தால் பராமரிப்பு பணியை மேற்கொண்டு 5 அல்லது 6 நாட்களில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்கி விடலாம் என வேதாந்தா நிறுவனம் தெரிவித்தது. அப்போது குறுக்கிட்ட தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், ஸ்டெர்லைட் ஆலையின் மீது அரசுக்கு நம்பிக்கை இல்லை என்றும், எனவே எந்த வகையிலும் ஆலையை திறக்க அனுமதி கொடுக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஸ்டெர்லைட் ஆலையின் இடைக்கால மனுவை ஒரு வாரம் தள்ளிவைக்க வேண்டும் எனவும் கோரினார். ஆனால் தற்போது நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதால், இந்த மனு குறித்து நாளை விரிவாக கேட்ட பின்னர் முடிவெடுக்கலாம் எனக் கூறி நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.