கேரளத்தைச் சேர்ந்த சேவியோ ஜோசப் என்பவருக்கு ஏழு மாதங்களில் மூன்று முறை கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருச்சூர் மாவட்டம், பொன்னுக்காரா என்ற ஊரைச் சேர்ந்தவர் சேவியோ. அவர் மஸ்கட்டில் உள்ள கிளினீங் சொல்யூசன்ஸ் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார். கடந்த ஜனவரியில் சீனாவில் இருந்து திரும்பிய அவருக்கு வித்தியாசமான காய்ச்சல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சேவியோவுக்கு சில அறிகுறிகள் தென்பட்டுள்ளன.
"ஏசி அறையில் இருக்கும்போது எனக்கு சுவாசிப்பதில் மிகவும் சிரமமாக இருந்தது. அது மார்ச் மாதம் நடுவில் நடந்தது. காய்ச்சல் மற்றும் சுவாசக்கோளாறு காரணமாக மருத்துவ உதவி தேவைப்பட்டது" என்கிறார் சேவியோ. நிமோனியா காய்ச்சலுக்கான சிகிச்சைக்கு பிறகு மார்ச் 19 ம் தேதியன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
அவருக்கு மருத்துவம் பார்த்த டாக்டர் மற்றும் செவிலியருக்கு கொரோனா பாசிட்டிவ். அதனால் சேவியோ உடனே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். அவருடைய நான்கு துணை ஊழியர்கள் மற்றும் 13 சகாக்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
சிலருடைய உயிரிழப்புகளும் சேவியாவை தீவிரமாக யோசிக்கவைத்தன. அவர் வந்தே பாரத் திட்டத்தில் விமானம் மூலம் கேரளாவுக்குத் திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு சோதனையில் நெகட்டிவ். ஒரு மாதம் தனிமைப்படுத்திக்கொண்டார். ஆனால் அவருக்கு சுவாசத்தில் இடையூறு ஏற்படுவதை உணர்ந்தார். திருச்சூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சில நாட்களில் மீண்டார்.
ஒரு மாதத்திற்குப் பிறகு மீண்டும் டெஸ்ட் எடுத்தார் சேவியோ. இப்படி மீண்டும் பாசிட்டிவ், மீண்டும் சிகிச்சை என ஏழு மாதங்களில் மூன்று முறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிர்பிழைத்துள்ளார் சேவியோ ஜோசப்.