இந்தியா

கேரளா: பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான கொரோனா பாதித்த பெண் தற்கொலை முயற்சி

Veeramani

ஆம்புலன்ஸ் ஓட்டுநரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான கேரளாவின் பதனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த கொரோனா பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்வுகளை உருவாக்கியுள்ளது.

நேற்று அந்த பெண் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தற்கொலை செய்துகொள்ள முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றார், ஆனால் அப்போது கதவை உடைத்துக்கொண்டு மருத்துவமனை பாதுகாப்பு ஊழியர்கள் அவரை மீட்டனர். ஆம்புலன்சில் அவர் சந்தித்த அதிர்ச்சி மற்றும் கொரோனா பாதிப்பு ஆகியவை, பெண்ணின் தற்கொலை முயற்சிக்கு பின்னால் இருந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

செப்டம்பர் 5 ஆம் தேதி, கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 19 வயது பெண், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். இந்த சம்பவம் நடந்து சில மணி நேரங்கள் கழித்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இருபத்தெட்டு வயது ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நவ்பால், கேரளாவின் 108 ஆம்புலன்ஸ் சேவையிலிருந்தும் நீக்கப்பட்டார் (இது மாநில அரசின் கீழ் உள்ளது)

இந்த சம்பவத்தை கண்டித்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு அமைக்கப்பட்ட நடவடிக்கைக் குழு நேற்று மாவட்ட ஆட்சியரகம் முன் போராட்டத்தை நடத்தியது. “மாவட்ட அதிகாரிகளின் தரப்பில் சில குறைபாடுகள் உள்ளன, அவை விசாரணையின் கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்" என்று அக்குழுவின் உறுப்பினர் விஜயன் மமூத் தெரிவித்தார்.

 “பெண் காவல்துறை அதிகாரி தொடர்ந்து விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும், தப்பிப்பிழைத்தவருக்கு அரசாங்கம் வேலை வழங்க வேண்டும் என்றும், அந்த பெண் மற்றும் குடும்பத்தினரின் பாதுகாப்பை அரசாங்கம் கையகப்படுத்த வேண்டும். பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர் (அட்டூழியங்களைத் தடுக்கும்) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளைச் செயல்படுத்துவதன் மூலமும் இந்த வழக்கை  விசாரிக்க வேண்டும், ”என்று நடவடிக்கைக்குழு கோரிக்கை வைத்தது.

ஏற்கெனவே கயம்குளத்தில் கொலை முயற்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்தான் நவ்பால். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கிரிமினல் பின்னணியைக் கொண்ட ஒருவரை 108 ஆம்புலன்ஸ் சேவையின் ஓட்டுநராக பணியமர்த்தி மாநில அரசு தவறிழைத்துவிட்டது என்ற குற்றச்சட்டும் எழுந்துள்ளது.