இந்தியா

கர்நாடகா: கொரோனா ஐசியூ படுக்கை ரூ.1.20 லட்சத்துக்கு விற்பனை- 3 மருத்துவமனை ஊழியர்கள் கைது

கர்நாடகா: கொரோனா ஐசியூ படுக்கை ரூ.1.20 லட்சத்துக்கு விற்பனை- 3 மருத்துவமனை ஊழியர்கள் கைது

Veeramani

கார்நாடகா மாநிலம் நெலமங்கலா பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை ஐசியூ படுக்கையை 1.20 இலட்சத்துக்கு விற்பனை செய்த வழக்கில் மத்திய பிரிவு போலீசார் மூன்று பேரை கைது செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் தெரிவித்த தகவல்களின்படி, “ லக்ஷ்மிதேவம்மா என்ற நோயாளி சமீபத்தில் நெலமங்கலாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார், அவரது நிலைமை மோசமடைந்தால் ஒரு ஐ.சி.யூ படுக்கை தேவைப்பட்டது. அதன்பின் ஜலஹள்ளி கிராஸ்-கோரகுண்டேபல்யாவிற்கு அருகிலுள்ள பீப்பில் ட்ரீ மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு படுக்கை எதுவும் இல்லை என்று கூறப்பட்டது. அவரது மகன் படுக்கை இருப்பு குறித்து விசாரித்தபோது, அம்மருத்துவமனையில் பணியாற்றிய இதய நோய் வல்லுநர் வெங்கட்டா சுப்பாராவ் மற்றும் பிஆர்ஓ மஞ்சுநாத் சந்துரு ஆகியோர் எம்.எஸ்.ராமையா மருத்துவமனையில் பணம் கொடுத்தால் ஐசியூ இருக்கை கிடைக்கும் என தெரிவித்தனர் எனக் கூறினார்.

அதன்பின் மூன்றாவது குற்றவாளியான ஆரோக்ய மித்ரா பணியாளர் புனித், எம்.எஸ். ராமையா மருத்துவமனையில் அனுமதிக்க, கொரோனா பாதித்த பெண்ணின் மகனிடமிருந்து 1.20 லட்சம் ரூபாய் லஞ்சம் கோரினர். அவர் கூகிள் பே மூலம் 50,000 மற்றும் 70,000 ரொக்கமாக கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்டு எம்.எஸ். ராமையா மருத்துவமனை நோயாளியை சிகிச்சைக்கு அனுமதித்தது. இருப்பினும், சில மணி நேரம் கழித்து அப்பெண் இறந்தார். அவரது குடும்பத்தினர் அவசர உதவி தொலைபேசி எண்ணான 112யை அழைத்து இதுகுறித்து தெரிவித்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.