இந்தியா

கொரோனா : தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சேவையை நிறுத்தும் ஊபர், ஓலா..!

கொரோனா : தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சேவையை நிறுத்தும் ஊபர், ஓலா..!

webteam

கொரோனா வைரஸ் எதிரொலியாக மத்திய அரசு அறிவிப்பின்படி தனிமைப்படுத்தப்பட்ட 75 மாவட்டங்களில் ஊபர், ஓலா தங்களது சேவையை நிறுத்தியுள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை தடுக்க முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன. 19 மாநிலங்களில் மக்கள் கூடுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவுகள் போடப்பட்டுள்ளன. அத்துடன் இந்தியாவில் உள்ள 75 மாவட்டங்களை தனிமைப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களும் அடங்கும்.

இந்நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட மாவட்டங்களில் சேவையை நிறுத்த டாக்ஸி நிறுவனங்களான ஊபர் மற்றும் ஓலா முடிவு செய்துள்ளன. இதுதொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ள ஊபர், அரசின் அறிவுறுத்தலை பின்பற்றும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட நகரங்களில் சேவையை நிறுத்த வேண்டும் என தங்கள் ஓட்டுநர்களுக்கு தெரிவித்துள்ளது. ஊபரிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை சேவை தொடராது எனவும் கூறப்பட்டுள்ளது.

இதேபோன்று ஓலா நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை நாம் கவனக்குறைவாக எடுத்துக்கொள்ளக்கூடாது என கூறப்பட்டுள்ளது. எனவே தனிமைப்படுத்தப்பட்ட நகரங்களில் அவசர தேவைகளை தவிர்த்து டாக்ஸி சேவையை மக்களுக்கு அளிக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக குறைந்த எண்ணிக்கையில் டாக்ஸிகளை இயக்கவும் அறிவுறுத்தியுள்ளது.