இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியான கோவாக்சினை அவசரகால தேவைக்கு பயன்படுத்த மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு நிபுணர் குழு பரிந்துரை அளித்தது.
கொரோனா தடுப்பூசிகளின் தன்மைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு, நிபுணர் குழு ஒன்றை நியமித்துள்ளது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்டிராஜெனகா நிறுவனத்துடன் இணைந்து கொரோனாவுக்கு தடுப்பூசியை உருவாக்கியது. அந்த மருந்தை இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்து வருகிறது. இந்த மருந்தை அவசரகால தேவைக்குப் பயன்படுத்துவதற்கு நேற்றுமுன்தினம் நிபுணர் குழு ஒப்புதல் அளித்தது.
இதேபோல பாரத் பயோடெக் நிறுவனம் ஐசிஎம்ஆருடன் இணைந்து தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசிக்கும் நிபுணர் குழு நேற்று ஒப்புதல் அளித்தது. தடுப்பூசியை உருமாற்றம் பெற்ற கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரத் தேவைக்கு மட்டும் அதிகபட்ச முன்னெச்சரிக்கையுடன் பயன்படுத்திக்கொள்ளலாம் என நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
இது தவிர கேடிலா நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியின் 3ஆம் கட்ட பரிசோதனைக்கும் நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், கோவாக்சின் மருந்தை மூன்றாவது கட்டமாக 26 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு செலுத்தி சோதனை நடத்தவிருப்பதாக பாரத் பயோடெக் தெரிவித்துள்ளது. இதற்காக 23 ஆயிரம் தன்னார்வலர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. கோவாக்சின் மருந்து சோதனை சென்னை, காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்த விதிமுறைகளில் அரசு எவ்வித சமரசத்தையும் செய்து கொள்ளாது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். தடு்ப்பூசி தொடர்பான தவறான வழிகாட்டுதல்களையும் வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்றும் மக்களை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.