இந்தியா

லாலுவுக்கு தண்டனை விவரம் இன்று அறிவிப்பு

லாலுவுக்கு தண்டனை விவரம் இன்று அறிவிப்பு

Rasus

கால்நடை தீவன முறைகேடு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத்துக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தியோஹர் அரசு கருவூலத்தில் இருந்து 89 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட 2வது வழக்கு ராஞ்சியில் அமைக்கப்பட்ட சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகளும் கடந்த 13ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த வழக்கில் 34பேர் குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையில் 11பேர் உயிரிழந்தனர். ஒருவர் அப்ரூவர் ஆனார். இதனையடுத்து லாலு பிரசாத் உள்பட 15பேர் குற்றவாளிகள் என கடந்த 23ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. பாட்னா அருகேயுள்ள பிர்ஸா முண்டா சிறைச்சாலையில் லாலு பிரசாத் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து தண்டனை விவரம் நேற்று அறிவிக்கப்படுவதாக இருந்த நிலையில், வழக்கறிஞர் விந்தேஸ்வரி பிரசாத் காலமானதால் தண்டனை அறிவிப்பை இன்றைக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே லாலுவின் மகனும் பீகார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், ரகுவன்ஸ் பிரசாத் சிங், மனோஜ் ஜா ஆகியோர் ஜனவரி 23-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவர்கள் அவமதித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், ராஷ்ட்ரீய ஜனதா தள மூத்த தலைவர் மனோஜ் ஜா, தாங்கள் யாரும் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்தோ, தீர்ப்பு குறித்தோ எதுவும் கருத்து தெரிவிக்காத நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவு அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக 1994-95-ஆம் ஆண்டுகளில் சைபாசா கருவூலத்தில் இருந்து 78 போலி ஒதுக்கீடு கடிதங்கள் பெற்று 37 கோடி ரூபாய் அளவில் பணம் எடுத்ததாக லாலு பிரசாத் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக லாலு பிரசாத் மீது 5 வழக்குகள் பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தியது. இவ்வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2013-ஆம் ஆண்டு லாலு பிரசாத் குற்றவாளி என தீர்ப்பளித்து. ஒருவழக்கில் மட்டும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவர் சுமார் 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாத சூழல் ஏற்பட்ட நிலையில் ஜாமீனில் வெளிவந்தார்.