டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த 2023 பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்ட டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் பதிவு செய்துள்ள வழக்கு விசாரணையில் பிணை கோரி தாக்கல் செய்த மனு கடந்த ஏப்ரல் இறுதியில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி அவர் மனு தாக்கல் செய்தார்.
இம்மனு மீதான விசாரணை இன்று டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவ சிகிச்சையில் உள்ள தனது மனைவியை சந்திக்க ஜாமீன் வழங்க வேண்டும் என மனிஷ் சிசோடியா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், “காவலில் உள்ளபடியே அவரது மனைவியை சந்திக்க அனுமதி வழங்கலாம்” என தெரிவித்தார்.
இதனையடுத்து நீதிபதி, வாரத்தில் ஒருநாள் காவல்துறை பாதுகாப்பில் சிசோடியா அவரது மனைவியை சந்திக்க அனுமதி வழங்குவதாகவும், சிசோடியா பிணை கோரிய மனு மீது பதிலளிக்க அமலாக்கத்துறை மற்றும் சிபிஐக்கு நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை மே 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.