இந்தியா

”சுருக்கு மடி வலைக்கு தமிழ்நாட்டில் ஏன் தடை?” - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

”சுருக்கு மடி வலைக்கு தமிழ்நாட்டில் ஏன் தடை?” - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

webteam

சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி வழங்ககோரிய மனுக்கள் மீதான இடைக்கால உத்தரவு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

கடல்பகுதியில் கரையில் இருந்து 12 நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால் சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அனுமதி வழங்கக்கோரி மோட்டார் படகு உரிமையாளர்கள், மீனவர்கள் பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்டோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் போபன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அமர்வில் இன்று நடைபெற்றது. அப்போது வாதிட்ட விசைப்படகு மீனவர்கள் தரப்பு, மாநில அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டை மடி வலைகளை ஆழ்கடலுக்கு எடுத்துச்செல்ல தங்களுக்கு கடலில் தனிவழி அமைத்துக் கொடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

மேலும், 12 நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால் சுருக்குமடி வலையை பயன்படுத்தலாம் எனவும், சில வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் நிபுணர்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல 12 நாட்டிக்கல் மைல்களுக்குள்ளாகவும் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து மீன்படிக்கலாம். மேலும் சுருக்குமடி வலை பயன்படுத்துவதால் கடல் வளம் அழிந்துவிடும், கடும்பாதிப்பை சந்திக்க நேரிடும் என்பதற்கான போதிய தரவுகள் இல்லை. இதை மத்திய அரசின் ஆய்வுக்குழுவின் அறிக்கைகளும் தெரிவிக்கின்றன. எனவே சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது.

பின்னர் தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதிட்டார். வாதத்தில் அவர், ”12 கடல் மைல்களுக்கு அப்பால் தடை செய்யப்பட்ட வலைகளை அனுமதித்தால் கடல்வளம் பெருமளவுக்கு பாதிக்கப்படும். 12 கடல்மைல்களுக்கு உள்பட்ட பகுதியில் மீன்வளம் முழுமையாக அழிந்துவிடும். லட்சக்கணக்கான பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாரம் கடுமையாகப் பாதிக்கப்படும்” என்று கூறினார்.

மேலும், தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்த அனுமதிக்கும் மத்திய அரசு, மாநில எல்லைக்குள் கடலில் கண்காணிப்பை மாநில அரசே பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறுவதை ஏற்கமுடியாது. இது நடைமுறைக்கு சாத்தியமற்றது. எனவே சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அனுமதி வழங்கக்கூடாது என்று வாதிட்டார். மேலும் தமிழ்நாட்டை பொறுத்தவரை கடல் வளத்தை காக்கவேண்டும், லட்ணக்கணக்கான பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்பதே முக்கிய நோக்கம். அதற்காகவே தடை விதிக்கப்பட்டுள்ளது. அதில் எந்த தளர்வும் ஏற்படுத்தக்கூடாது எனவும் தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடப்பட்டது.

தொடர்ந்து வாதிட்ட தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் குமணன், "சுருக்கு மடி வலை என்றால் என்ன? என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அந்த வலை சுமார் ஒரு ஹெக்டேர் அளவுக்கு பெரியது. பெரும் பொருட்செலவு செய்து மீன்படிக்க செல்பவர்கள் பயன்படுத்துவது. அதைப் பயன்படுத்தி மீன் பிடிக்கும்போது நடுக்கடலில் இருந்து கரை நோக்கி வரும் மீன்கள் முழுவதும் தடைபடும். இது மீன்பிடி தொழிலையே நம்பியுள்ள லட்சக்கணக்கான பாரம்பரிய மீனவர்கள் கடும் பாதிப்படைவர். இது கண்காணிப்புள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் நிலக்கரி எடுப்பது போல் அல்ல. மாறாக கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என வாதத்தை முன்வைத்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சுருக்குமடி வலையை பயன்படுத்தி எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மீன் பிடிக்கப்படுகிறது, சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பவர்களின் படகுகள் தொடர்பான விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பன உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தனர். பின்னர் இந்த விவகாரத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதாக கூறிய நீதிபதிகள் வழக்கின் உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.