Sukesh Twitter
இந்தியா

மனைவியின் பிறந்தநாளுக்கு 'கேக்' வாங்க சுகேஷ் சந்திரசேகருக்கு அனுமதி ஏன்? நீதிமன்றம் விளக்கம்

மனைவியின் பிறந்த நாளுக்கு ‘கேக்’ வாங்க சுகேஷ் சந்திரசேகருக்கு அனுமதி அளித்திருக்கிறது டெல்லி நீதிமன்றம்.

Justindurai S

இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது உள்ளிட்ட பல்வேறு மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்ட பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், தற்போது டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அப்படி சிறையில் இருந்த அவர், அங்கிருந்தபடியே மத்திய அரசு அதிகாரி போல் பேசி, ஒரு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல தொழிலதிபரொருவரின் மனைவியிடம் ரூ.200 கோடி பறித்ததாக மற்றொரு வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மீண்டும் கைதானார். அப்போது அவருடன் அவருடைய மனைவி லீனா மரியா பாலும் கைது செய்யப்பட்டார்.

இவர்களில் சுகேஷ் சந்திரசேகர் டெல்லி மண்டோலி சிறையிலும், மோசடிகளுக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி லீனா பால் மண்டோலி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் லீனா பாலுக்கு இன்று (ஏப்ரல் 28) பிறந்த நாள் வருவதால் அவருக்கு கேக் ஒன்று வாங்கி கொடுக்க அனுமதிக்க வேண்டும் என சுகேஷ் சந்திரசேகர் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி ஷைலேந்தர் மாலிக் ஏப்ரல் 25 அன்று பிறப்பித்த உத்தரவில், லீனா பாலுக்கு அவர் பிறந்த நாளுக்கு சிறை பேக்கரியில் இருந்து கேக் வாங்கி கொடுக்க சுகேஷ் சந்திரசேகருக்கு அனுமதி அளித்தார். இதை சிறை அதிகாரி லீனாவிடம் 28ஆம் தேதி (இன்று) ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் கூறினார்.

கைதியொருவர் சிறையிலிருந்தாலும் தன் குடும்பத்தினருடன் உணர்வுப்பூர்வமாக இணைந்திருப்பதற்கான நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக இந்த அனுமதி வழங்கப்படுவதாகவும், இதில் சட்ட அம்சங்களை விட மனித உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்.