இந்தியா

ஆகஸ்ட் 25-ல் 2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிப்பு?

ஆகஸ்ட் 25-ல் 2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிப்பு?

webteam

2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் தீர்ப்பு தேதி வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, செப்டம்பர் முதல் வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2ஜி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ குற்றம் சுமத்தியிருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது தீர்ப்பின் முக்கியப் பகுதியை எழுதும் பணி தீவிரமடைந்திருப்பதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக சிபிஐ வழக்கு தொடர்ந்து. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, தொலைத்தொடர்பு துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா உள்ளிட்ட 14 தனிநபர்களின் மீதும், 3 நிறுவனங்களின் மீதும் சிபிஐ குற்றம்சாட்டியிருந்தது. சுமார் ஆறு வருடங்களாக நடைபெற்ற இந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் நிறைவு பெற்று தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 2ஜி அலைக்கற்றை வழக்கில் தீர்ப்பு தேதி எப்போது வழங்கப்படும் என்பது ஆகஸ்ட் 25 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும், அதிலிருந்து பத்து நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட்டுவிடும் என்றும் நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து தீர்ப்பின் முக்கிய பகுதியை எழுதும் பணிகள் தீவிரமடைந்து இருப்பதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் செப்டம்பர் முதல் வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.