இந்தியா

அன்பளிப்புகளை உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கிய புதுமணத் தம்பதியினர்

அன்பளிப்புகளை உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கிய புதுமணத் தம்பதியினர்

webteam

குஜராத்தில் புதுமணத் தம்பதி, தங்கள் திருமணத்துக்கு வந்த அன்பளிப்புகளை காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்காக வழங்கியுள்ளனர்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் பாது‌காப்புப் படையினர் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதி ஒருவன் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினான். இந்த கொடூரத் தாக்குதலில் 40 வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். 

இதனையடுத்து உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் சார்பாகவும், சொந்த விருப்பத்தின் பேரில் பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர். மேலும் வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அளிக்க விரும்புவோர் https://bharatkeveer.gov.in என்ற இணையதளத்துக்கு சென்று நிதியுதவி அளிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்தது. அதன்படி பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். 

இந்நிலையில் குஜராத்தில் திருமணம் செய்து கொண்ட தம்பதி தங்கள் திருமணத்துக்கு வந்த அன்பளிப்புகளை உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்காக வழங்கியுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்துகொண்ட மகேஷ் - தீபிகா இருவரும் தங்களது திருமணத்துக்கு வந்த பரிசுப்பொருட்கள், ரொக்கம், தங்கநகைகள் அனைத்தையுமே நிதி உதவியாக வழங்கியுள்ளனர். 

மேலும் கைகளில் இந்திய பாதுகாப்புப்படை வீரர்களுக்கு ஆதரவாக பதாகைகளை வைத்து தங்களது தங்களது அன்பை வெளிப்படுத்தினர். அந்த பதாகையில் '' யார் சொன்னது இந்தியாவில்1427 சிங்கங்கள் மட்டுமே இருக்கிறது என்று, நாட்டை காப்பதற்காக 13 லட்சம் ராணுவ வீரர்கள் எல்லையில் நின்று கொண்டு இருக்கிறார்கள் என்று உணர்ச்சிப்பூர்வமாக எழுதப்பட்டு இருந்தது. மேலும் திருமண ஊர்வலத்தில் பாகிஸ்தானை கண்டித்து கோஷங்களும் எழுப்பப்பட்டன.

சில தினங்களுக்கு முன்பு குஜராத் வைரவியபாரி ஒருவர் தனது மகளின் திருமண விருந்தை ரத்து செய்துவிட்டு அதற்கான தொகையை காஷ்மீர் சம்பவத்துக்கு நிதியாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.