செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அங்கு தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தாய் தந்தையை இழந்த குழந்தைகள் மற்றும் உறவுகளை இழந்த மக்கள் பலர் ஆதரவின்றி நிற்கின்றனர். அவர்களுக்கு கேரள அரசு ஆதரவுக் கரம் நீட்டி வருகிறது.
இந்நிலையில், கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த சுதி என்பவர், "எங்களுக்கு குழந்தை இல்லை. வயநாடு பேரிடரில் பெற்றோரை இழந்து நிற்கும் மகள் இருந்தால் எங்களுக்கு தருவீர்களா? நானும் மனைவியும் தனியாக இருக்கிறோம்" என்று கேட்டிருக்கிறர். அதற்கு கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதில், எனது ஃபேஸ்புக் பதிவுக்கு கீழே ஒரு கருத்தை கவனித்தேன். வயநாட்டில் சுகாதாரத்துறை சம்பந்தமான விஷயங்களை ஏற்பாடு செய்ததால் இதை கவனிக்கவில்லை.
அன்பு சுதி, உங்கள் அன்பு உள்ளத்திற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வலியை முழுமையாக புரிந்து கொண்டிருக்கிறேன். உங்கள் வார்த்தைகளால் கண்ணில் நீர் ஊறுகின்றன. உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் அன்பும் மரியாதையும்.
மத்திய குழந்தை நீதி சட்டம் 2015 படி பெற்றோரை இழந்த பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளை அரசு பாதுகாக்கிறது. வளர்ப்பு, பராமரிப்பு மற்றும் தத்தெடுப்பு அனைத்தும் சட்ட நடைமுறைகள் மூலம் CARA (Central Adoption Resource Authority) பதிவு செய்தவர்கள் குழந்தைகளை தத்தெடுக்கலாம்.
6 வயது முதல் 18 வயது வரை குழந்தைகள் வளர்ப்பு மற்றும் பராமரிப்பிற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது. அதுவும் குழந்தையின் ஆர்வத்தை மனதில் கொண்டு செய்ய வேண்டியுள்ளது.
CARA-வில் பதிவு செய்தால், தற்போது அரசாங்க பாதுகாப்பில் இருக்கும் எந்த குழந்தையையும் தத்தெடுக்கும் நடவடிக்கையில் சுதி பங்கேற்கலாம். சுதி போன்ற பலர் அதே கோரிக்கையோடு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையை அணுகும் சூழலில், அவர்களுக்காகவும் இது எழுதப்பட்டுள்ளது. என்று சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் பதிவிட்டுள்ளார்.