இந்தியா

இந்தியாவில் வேகமாக குறையும் கொரோனா - இன்றைய பாதிப்பு முழு விபரம்

இந்தியாவில் வேகமாக குறையும் கொரோனா - இன்றைய பாதிப்பு முழு விபரம்

சங்கீதா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில், 22,270 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் ஜனவரி மாதத்தில் 3-வது அலையின்போது உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு, தற்போது மளமளவென குறைந்து வருகிறது. இந்நிலையில், தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22 ஆயிரத்து 270 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 25 ஆயிரத்து 920 மற்றும் நேற்று முன் தின பாதிப்பான 30 ஆயிரத்து 757- ஐ விட குறைவாகும்.

இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 28 லட்சத்து 2 ஆயிரத்து 505 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 60 ஆயிரத்து 298 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 20 லட்சத்து 37 ஆயிரத்து 536 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 53 ஆயிரத்து 739 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 325 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 11 ஆயிரத்து 230 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 175 கோடியே 3 லட்சத்து 86 ஆயிரத்து 834 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 2.07 சதவீதத்தில் இருந்து 1.80 ஆகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 2.76 சதவீதத்தில் இருந்து 2.50 ஆகவும் குறைந்துள்ளது.