கொரோனா பாதிப்பு எதிரொலியால் டெல்லியில் ஆரம்பப் பள்ளிகளுக்கு மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் டெல்லியில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். நேற்றைய தினம் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயோமேட்ரிக் முறைக்கு தடை விதிக்கப்பட்டு, பழைய பதிவேடு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து டெல்லியில் அரசு ஊழியர்கள் பயோமேட்ரிக் முறையை பயன்படுத்த வேண்டாம் என அரசு சார்பில் உத்தரவு பிறக்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ளும் புதிய முயற்சியாக ஆரம்பப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை ஆரம்பப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மாநிலங்களவையில் அறிக்கை வெளியிட்டார். உலக சுகாதார அமைப்பு அறிவுரை வழங்குவதற்கு முன்னதாகவே அதாவது ஜனவரி 17ஆம் தேதி முதலே கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்ததாக தெரிவித்தார். மார்ச் 4ஆம் தேதி வரை இந்தியாவில் 29 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த ஹர்ஷ்வர்தன், அமைச்சர்கள் குழு ஒன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்து வருவதாக கூறினார்.