இந்தியா

இந்தியாவில் 30 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியாவில் 30 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

சங்கீதா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில், 30 ஆயிரத்திற்கும் கீழ் தினசரி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் ஜனவரி மாதத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு, பிப்ரவரி மாதத்தில் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.

அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,409 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 44,877 ஆக இருந்தநிலையில், நேற்று 34,113 ஆக தினசரி கொரோனா பாதிப்பு இருந்தது. இந்நிலையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி 27,409 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதித்துள்ளது.

இதன்மூலம், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 92 ஆயிரத்து 943 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 82,817 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 17 லட்சத்து 60 ஆயிரத்து 458 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4,23,127 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பால், கடந்த 24 மணி நேரத்தில் 347 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,09,358 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் நாடு முழுவதும் இதுவரை 173 கோடியே 42 லட்சத்து 62 ஆயிரத்து 440 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் விகிதம் 2.23 சதவிகிதமாக சரிந்துள்ளது.