இந்தியா

இப்படியொரு பொறுப்பற்ற செயலா..? திருச்சூரில் கொரோனா பாதித்த இளைஞர் சினிமா, மால் சென்ற அவலம்

இப்படியொரு பொறுப்பற்ற செயலா..? திருச்சூரில் கொரோனா பாதித்த இளைஞர் சினிமா, மால் சென்ற அவலம்

webteam

கொரோனா பாதித்த இளைஞர் ஒருவர் திரிச்சூரில் உள்ள திரையரங்கிற்கு வந்து திரைப்படம் பார்த்து திரும்பியுள்ளார்.

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் 7 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதித்த இருவருடன் விமானத்தில் பயணித்து கேரளா வந்த 47 தமிழர்களின் விவரங்களை தமிழக சுகாதாரத்துறையிடம் அளித்துள்ளதாக திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியர் கோபாலகிருஷ்ணன் புதிய தலைமுறையிடம் தெரிவித்துள்ளார்.

தோஹாவில் இருந்து வந்த விமானம் ஒன்றில் பயணித்த 26 தமிழர்களின் பட்டியலையும், பஹ்ரைனில் இருந்து கேரளா வந்த விமானத்தில் இருந்த 21 தமிழர்களின் விவரங்களையும் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளதாக அவர் கூறியுள்ளார். அவர்களுக்கு கொரோனா தொற்று அறிகுறி இருக்க வாய்ப்பு இல்லை என்றும், கண்காணிப்பில் வைக்க தமிழக அரசிடம் அறிவுறுத்தியுள்ளதாக திருவனந்தபுரம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு உள்ள 21 வயதுள்ள இளைஞர் ஒருவர் வணிக வளாகத்திற்கு வந்துள்ளார். மேலும் அவர் திரைப்படம் ஒன்றையும் பார்த்துவிட்டு திரும்பியுள்ளார். அந்த ஊரில் நடந்த நிச்சயதார்த்த நிகழ்வு ஒன்றிலும் அவர் பங்கேற்றுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இதற்கிடையில், பாதிக்கப்பட்ட அந்நபரின் உறவினரின் எட்டு மாத குழந்தைக்கும் கொரோனா அறிகுறி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதன்பின்னர் அக்குழந்தை தாயுடன் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் இருப்பதாக அம்மாவட்ட ஆட்சியர் எஸ்.ஷநவாஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு உள்ளவர்களாக இருந்தால் தனிமையில் இருந்து சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு செய்திகள் வெளியான பிறகும் அந்த இளைஞர் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார். நோயின் விளைவுகள் குறித்து எந்த விழிப்புணர்வுக்கும் அவர் அக்கறை கொள்ளவில்லை என்பது தெரிய வந்துள்ளது. கேரள மாநிலமே உஷார் நிலையில் இருக்கும் போது இவர் இவ்வளவு பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ஆட்சியர் கூறுகையில், “இளைஞரின் தந்தை, தாய் மற்றும் சகோதரி ஆகியோரை சுகாதார அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். அவர்கள் தனிமையில் உள்ளனர். இதுவரை, பாதிக்கப்பட்ட நபருடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் 355 பேரின் பட்டியலை சுகாதார அதிகாரிகள் கொண்டு வந்துள்ளனர்.

கொடுங்கல்லூரைச் சேர்ந்த இந்த இளைஞர், பிப்ரவரி 29 அன்று கத்தார் முதல் கொச்சி வரை கொரோனா பாதிக்கப்பட்ட பதனம்திட்டா குடும்பத்துடன் பயணம் செய்துள்ளார். மார்ச் 5 ஆம் தேதி தொண்டை வலி ஏற்பட்டபோது, மறுநாள் ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்று மருந்துகளை எடுத்துக் கொண்டுள்ளார். அங்கு இவருக்கு சிகிச்சை மேற்கொண்ட மருத்துவரும் தனிமையில் வைக்கப்பட்டுள்ளார்” என்று கூறியுள்ளார்.