இந்தியா

கொரோனா எதிரொலி : ஊழியர்களின் ஊதியத்தைக் குறைத்த விமான நிறுவனங்கள்

கொரோனா எதிரொலி : ஊழியர்களின் ஊதியத்தைக் குறைத்த விமான நிறுவனங்கள்

webteam

கொரோனா வைரஸ் தாக்கத்தால் பெருமளவு இழப்பைச் சந்தித்து வரும் விமான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் ஊதியத்தைக் குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளன.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நாடுகளும் பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது விமானச் சேவை வழங்கி வரும் நிறுவனங்கள்தான். எனவே விமான நிறுவனங்கள் இழப்பை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இந்தியாவின் மிகப்பெரிய விமானச் சேவை நிறுவனங்களின் ஒன்றான இண்டிகோ தனது ஊழியர்களுக்கு ஊதிய குறைப்பை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஊழியர்களுக்கு அந்நிறுவன முதன்மை செயல் அதிகாரி ரோனோ தத்தா எழுதியுள்ள கடிதத்தில் தனது ஊதியத்தை 25 சதவிகிதம் குறைத்துக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பிற ஊழியர்களுக்கு 5 விழுக்காடு முதல் 20 விழுக்காடு வரை ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனமும் தனது ஊழியர்களுக்கு வழங்கப்படும் படிகளை குறைப்பதாக அறிவித்துள்ளது.

இரண்டு பயணங்களுக்கு இடையில் ஓய்வு அளிக்கப்படும்போது ஊழியர்களுக்கு வழங்கப்படும் படியை 30 முதல் 40 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. மற்றொரு விமானச் சேவை நிறுவனமான கோஏர் சுழற்சிமுறையில் சம்பளமில்லா விடுமுறை அளிக்கும் நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் செலவுகளை குறைப்பதுடன் ஊழியர்கள் மொத்தமாக கூடுவதும் குறைக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.