தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று வேகமெடுத்து வருவதால் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.
தேசிய அளவில் கொரோனா பரவல் விகிதம் இந்தியாவில் ஏற்ற இறக்கங்களை கண்டு வருகிறது. மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட முக்கிய மாநிலங்களில் கொரோனா பரவல் விகிதம் வெகுவாக குறைந்துள்ள நிலையில் தலைநகர் டெல்லியில் மட்டும் தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 17,083 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தினமும் 2000-க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் உயிர் இழப்பும் கணிசமாக அதிகரித்துள்ளது.
இதையடுத்து டெல்லியின் துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா தலைமையிலான மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் கடந்த 8-ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் அந்தக் கூட்டத்திற்கு பிறகு பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை கடைபிடிக்காமல் மாஸ்க் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.500 அபராதமாக விதிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
மேலும் டெல்லியில் ஒரே நாளில் 2,164 பேர் கொரோனா தொற்றிற்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 8 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் இதுதான் அதிகம் எனவும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா நீதிமன்றத்திற்கு வரும்போது அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. டெல்லியை பொருத்தவரையில் ஒட்டுமொத்தமாக 8,205 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.