இந்தியா

கொரோனா விரைவுச் செய்திகள் ஏப்ரல் 26: ஆக்சிஜன் தயாரிப்பு முதல் கட்சிகளின் நிலைப்பாடு வரை

கொரோனா விரைவுச் செய்திகள் ஏப்ரல் 26: ஆக்சிஜன் தயாரிப்பு முதல் கட்சிகளின் நிலைப்பாடு வரை

webteam

> கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய ஆக்சிஜன் இல்லாததால் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த சூழலில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான கட்டுமானங்கள் இருப்பதால், ஆக்சிஜன் உற்பத்திக்காக ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கு விசாரணையின் ,ஸ்டெர்லைட் ஆலையில் மாநில அரசே ஆக்சிஜன் தயாரிக்கலாம் என நீதிபதிகள் யோசனை கூறி இருந்தனர். இதுதொடர்பாக தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளிடம் ஆலோசித்து முடிவு செய்ய திட்டமிட்ட மாநில அரசு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேமுதிக, பாமக, காங்கிரஸ், பாஜக கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது ஆலையை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாம் என பெரும்பாலான கட்சிகள் கருத்து தெரிவித்தன. அனைத்து கட்சிகளின் ஒருமித்த கருத்தை ஏற்று, ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலைக்கு 4 மாதங்கள் அனுமதி வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலையை திறக்க வேண்டியது அரசின் நோக்கமல்ல என்றும் தற்போது ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுப்பதாகவும் கூறினார்.

>ஸ்டெர்லைட் ஆலையில் அக்சிஜன் தயாரிக்க தற்காலிக அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து, அந்த ஆலை எதிர்ப்பு கூட்டமைப்பினர் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆக்சிஜன் தயாரிப்பு என்ற பெயரில் புறவாசல் வழியாக நுழைய ஸ்டெர்லைட் ஆலை முயல்வதாகவும், உண்மையிலேயே ஆக்சிஜன் தயாரிக்க வேண்டுமானால், சத்தீஷ்கர், ஒடிசா, ராஜஸ்தான், ஹரியானா, ஜார்கண்ட், கர்நாடகாவில் உள்ள வேதாந்தா நிறுவன ஆலைகளில் தயாரித்து வழங்கலாமே எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அனைத்து கட்சிகளும் ஆலைக்கு துணைப் போவதாகவும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

>ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்குவது தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து முகநூலில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். திமுக சார்பில் எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி பங்கேற்று கட்சியின் நிலைப்பாட்டை எடுத்துரைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் தற்காலிகமாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என தமிழக அரசு முடிவெடுத்திருப்பது தற்காலிகமானது தான் எனவும், திமுக ஆட்சி அமைந்த பிறகு நச்சு ஆலையான ஸ்டெர்லைட், எப்போதும் எந்த சூழலிலும் திறக்கப்படாது என ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

>சீரம் இந்தியா நிறுவனம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள் அண்மையில் கொரோனா தடுப்பூசியின் விலையை உயர்த்தியிருந்தன. வரும் மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட உள்ளதால் விலையை குறைக்க மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

> கொரோனா காலத்தில், நோய்த்தொற்றுக்கு ஆட்பட்ட நோயாளிகளின் உயிரைக்காக்க, ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேறு வழியே இல்லை என்பது போல ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பது பற்றி ஆலோசிப்பது அபத்தமானது, அவமானகரமானது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சூழலியல் விதிகளை மீறி மன்னார் வளைகுடாவுக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள ஆலையை எதன்பொருட்டும் திறக்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளார். ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலையை விட்டால், வேறு நிறுவனங்களே இல்லையா என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்னொரு நெடிய போராட்டத்திற்கு விதையைத் தூவிடும் இந்த முடிவை அரசு மாற்றிக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

>கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக இல்லாவிட்டால், வாக்கு எண்ணிக்கைக்கு தடைவிதிக்க நேரிடும் என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

>முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், தடுப்பூசி தயாரிப்பாளர்கள் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் வெவ்வேறு விலை நிர்ணயம் செய்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். இது மத்திய அரசை விட குறைவான நிதி ஆதரங்கள் உள்ள மாநிலங்களின் மீது நியாயமற்ற கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார். 2021-2022ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தடுப்பூசி திட்டத்திற்கு ரூ.35,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ள முதல்வர் பழனிசாமி, இந்த நிலையில் மத்திய அரசே தடுப்பூசிகளை கொள்முதல் செய்யும் என மாநில அரசுகள் எதிர்பார்ப்பது நியாயமானதுதான் என்று கூறியுள்ளார். இந்தச் சூழலில், 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் செலுத்த தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து விநியோகிக்கவேண்டும் என முதல்வர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவாகவும் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்ய போதிய தடுப்பூசிகளை வாங்க இறக்குமதி உள்ளிட்ட மாற்று ஏற்பாடுகளை பரிசீலிக்கவேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

>தமிழகத்தில் ஒரே நாளில் 15,684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு ஒரேநாளில் 94 பேர் உயிரிழப்பு. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 94 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் ஒரே நாளில் 4,250 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 4,250 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டு 1,142, கோவை 1,056 பேருக்கும் ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் இணை நோய் இல்லாத 14 பேர் ஒரேநாளில் உயிரிழந்துள்ளனர்.

>கொரோனா தொற்றுப் பரவலால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க இந்தியாவிற்கு 135 கோடி ரூபாய் நிதியுதவியை வழங்குவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அந்நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, கொரோனா தொற்றுப் பரவலால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலை கண்டு மனம் கலங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். மருத்துவ உபகரணங்கள் விநியோகம், மருத்துவ சேவை வழங்கி வருவோர், இக்கட்டான சூழலில் இருப்போர் போன்றவர்களுக்கு உதவ கூகுள் சார்பாக135 கோடி ரூபாய் நிதி உதவி வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

>கொரோனா தடுப்பு மருந்துகள் மற்றும் சிகிச்சை உபகரணங்களின் இருப்பு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்துக்கொண்ட வழக்கு, தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், கொரோனா தடுப்பு உபகரணங்களும், மருந்துகளும் போதுமான அளவு கையிருப்பு உள்ளதாக கூறினார். மத்திய அரசு தங்களுடன் உரிய ஆலோசனை மேற்கொள்ளாமல், 45 டன் மருத்துவ ஆக்சிஜனை ஆந்திர மாநிலத்திற்கு அனுப்பி வைத்துவிட்டதாக அதிருப்தி தெரிவித்தார். அதற்கு பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல் சங்கர நாராயணன், தமிழக அரசுடன் கலந்தாலோசித்த பின்னரே ஆக்சிஜன் ஆந்திராவுக்கு திருப்பி விடப்பட்டதாக விளக்கமளித்தார். தமிழக அரசின் குற்றச்சாட்டு அதிர்ச்சியளிப்பதாகக் கூறிய அவர், இதனை மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதாக உறுதி கூறினார். கொரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக விவரங்களைக் கேட்டறிந்த தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, கொரோனா 2ஆம் அலை தீவிரமடைய தேர்தலும் ஒரு காரணம் என குற்றம்சாட்டினார். வாக்கு எண்ணிக்கை நாள் அன்றும் அதே தவறு நடந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென நீதிபதிகள் அறிவுறுத்தினர். அதனால், பொது விடுமுறையான மே 1ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை நாளாக மே 2ஆம் தேதி பொதுமுடக்கத்தை அறிவிக்கலாம் என தலைமை நீதிபதி அமர்வு பரிந்துரை செய்தது. மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை பணிக்கு நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள், அரசியல் கட்சிகள் சார்ந்த பிரதிநிதிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கலாம் என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக 28ஆம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டுமெ தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

>கொரோனா பரவலால் நெருக்கடியை எதிர்கொண்டு வரும் இந்தியாவிற்கு, உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு விதங்களில் உதவிக்கரம் நீட்டியுள்ளது. உலகில் பல்வேறு நாடுகளில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி கொடுத்து உதவிய இந்தியா, தற்போது கொரோனா பரவலால் நெருக்கடியைச் சந்தித்துள்ளது. கொரோனா இரண்டாவது அலையால், நாடு முழுவதும் உள்ள மக்கள் நிலை குலையும் அளவிற்கு, கொரானா பரவல் தினந்தோறும் உச்சத்தை தொட்டு வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல உயிரிழப்புகள், இரவு பகலாக விடிய விடிய மயானங்களில் சடலங்கள் எரியும் காட்சிகள் போன்றவற்றை கண்ட உலக நாடுகள் கலங்கிப் போயுள்ளன. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும், சிகிச்சைக்குத் தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் அளிக்க பல்வேறு நாடுகளும் உதவ முன் வந்துள்ளன.

கொரோனா தடுப்பூசிக்கான மூலப் பொருட்களை வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. குறிப்பாக, விரைவில் நோயறியும் சோதனைக் கருவிகள், வென்டிலேட்டர்கள் மற்றும் கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை அமெரிக்கா உடனடியாக இந்தியாவிற்கு அனுப்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தயாரிக்க பயன்படும் 300க்கும் அதிகமான கருவிகள் நியூயார்க்கிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்த நிபுணர் குழு ஒன்றையும் அனுப்பி வைப்பதாக ஜோ பைடன் அரசு தெரிவித்துள்ளது. ஆக்சிஜன் உற்பத்திக்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும் இந்தியாவிற்கு அனுப்பி வைப்பதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், இந்தியாவுடன் சேர்ந்து கைகோத்து நிற்கும் என ஃபிரான்ஸ் தெரிவித்துள்ளது. இதே போல இந்தியாவிற்குத் தேவையான மருத்துவ வசதிகளையும், ஆக்சிஜன் உற்பத்திக்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும் வழங்குவதாக ஜெர்மனி தெரிவித்துள்ளது. இந்தியாவில் நிலவும் கொரோனா பரவல் கவலையளிப்பதாக அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் தெரிவித்துள்ளார். இதே போல பாகிஸ்தானில் உள்ள தொண்டு நிறுவனம், இந்தியாவிற்கு ஆம்புலன்ஸ் கொடுத்து உதவ முன் வந்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூரிலிருந்து விமானங்கள் மூலமாக ஆக்ஸிஜன் அடங்கிய கொள்கலன்கள் இந்தியாவிற்கு வந்துள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவுடன் துணை நிற்பதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது. இதே போல பல்வேறு நாடுகளும் கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுடன் கைகோர்ப்பதாகத் தெரிவித்துள்ளது. இவை தவிர துபாயில் உள்ள மிக உயர கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் இந்தியாவிற்கு ஆதரவாக stay strong india என்ற வார்த்தைகள் ஒளிரவைக்கப்பட்டது. மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவுடன் சேர்ந்து நிற்போம் எனக்கூறும் வகையிலான ஹாஷ்டேக்குகளும் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

>கொரோனா அறிகுறிகளோடு பரிசோதனை செய்யும் சிலருக்கு நெகடிவ் என ரிசர்ல்ட் வருவது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அறிகுறிகள் இருந்தும் சிலருக்கு நெகடிவ் என ரிசல்ட் வருவது ஏன்? அப்படி வந்தால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்? கொரோனா 2ஆம் அலையால் நாடே கதிகலங்கி இருக்கும் சூழலில், மற்றொரு புதிய சிக்கல் உருவெடுத்திருக்கிறது. முன்பெல்லாம், கொரோனா வந்தால் என்ன சிகிச்சை கொடுப்பது என பல சந்தேகங்கள் உலவிய சூழலில், இப்போது, கொரோனா இருக்கிறதா? இல்லையா? என எழும் சந்தேகங்கள் பெரும் கலக்கத்தை ஏற்படுத்துகின்றன. Real Time Reverse Transcription Polymerase Chain Reaction எனப்படும் ஆர்.டி.பி.சி.ஆர் அல்லது ஆன்டிஜென் பரிசோதனைகள் மூலம், ஒருவருக்கு கொரோனா இருப்பதைக் கண்டறிந்துவிடலாம். அதிலும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை நூற்றுக்கு 70 சதவிகிதம் வரை துல்லியத்தன்மையுடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், கொரோனா அறிகுறிகளோடு ஒருவர் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டால், அதன் முடிவு நெகடிவ் என வருவதாகக் கேள்விப்படும் தகவல்கள் புதிய பிரச்னையாகக் கிளம்பியிருக்கிறது. ஏன் அப்படி நடக்கிறது என சில முக்கிய காரணங்களை மருத்துவர்கள் கூறுகின்றனர். பரிசோதனைக் கூடங்களில் சேகரிக்கும் சளி மாதிரிகளை முறையாகக் கையாளாதது, உடலில் உள்ள வைரஸின் அளவு மிகக் குறைவாக இருப்பதும் நெகடிவ் வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பரிசோதனைக்கு முன் தண்ணீர் குடிப்பதும், உணவு உண்பதும் பரிசோதனை முடிவைப் பாதிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். உடல்நலத்தில் மக்கள் அலட்சியத்துடன் இருக்காமல், அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகில் உள்ள மருத்துவரையோ, மருத்துவமனையையோ அணுக வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தும் அறிகுறிகள் தொடரும் நபர்கள், உடனடியாக தங்களை தனிமைப்படுத்தி கொண்டு மீண்டும் மறு பரிசோதனை மேற்கொள்வதே கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

>வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் முகவர்களுக்கு கொரோனா பரிதோனை அல்லது தடுப்பூசி கட்டாய என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 72 மணி நேரத்திற்கு முன் அதிகாரிகளும், முகவர்களும் ஆர்.டி.பிசிஆர் பரிசோதனை செய்திருக்க வேண்டும், அல்லது தடுப்பூசி ஒரு தவணையாவது செலுத்தியிருக்க வேண்டும் எனவும் சத்யபிரத சாகு அறிவுறுத்தியுள்ளார். கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் ஏற்பாடு செய்யும் எனவும், ஒருவேளை அதிகாரிகள் மற்றும் முகவர்களுக்கு கொரனா உறுதி செய்யப்படும் பட்சத்தில், அவர்களுக்கு பதிலாக கூடுதல் தேர்தல் அதிகாரிகள் மற்றும் முகவர்கள் பணியில் ஈடுபடுவதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறினார்.