இந்தியா

“விளக்கு ஏற்றுவதால் இந்தியாவை விட்டு கொரோனா சென்றுவிடாது; ஆனால்”- நாராயணசாமி பேட்டி

“விளக்கு ஏற்றுவதால் இந்தியாவை விட்டு கொரோனா சென்றுவிடாது; ஆனால்”- நாராயணசாமி பேட்டி

webteam

சினிமா நடிகர்களிடமும், விளையாட்டு வீரர்களிடமும் பேசுவது மட்டுமே பிரதமரின் வேலை இல்லை என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 83 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 274 பேர் குணமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  முன்னதாக ஏப்ரல் 3 ஆம் தேதி வீடியோ வழியாக பேசிய பிரதமர் மோடி 5-ஆம் தேதி இரவு மக்கள் அனைவரும் நமது ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் இரவு 9 மணி முதல் 9:09 வரை வீடுகளில் அகல் விளக்கை ஏற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். 


அதன்படி நேற்று இரவு 9 மணி முதல் அடுத்த 9 நிமிடங்களுக்கு குடியரசுத் தலைவர், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், பொது மக்கள் என அனைவரும் அவர்களது வீடுகளில் அகல் விளக்குகளை ஏற்றினர். இந்நிலையில் விளக்கு ஏற்றிய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 


அவர் பேசும்போது “ விளக்கு ஏற்றுவதால் இந்தியாவைவிட்டு கொரோனா சென்றுவிடாது. நாங்கள் அரசியல் செய்ய விரும்ப வில்லை. ஆனாலும் பிரதமரின் பேச்சுக்கு மரியாதை கொடுத்து விளக்குகளை ஏற்றினோம். பிரதமர் மக்களின் தேவை என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சினிமா நடிகர்களிடமும், விளையாட்டு வீரர்களிடமும் பேசுவது மட்டுமே பிரதமரின் வேலை இல்லை. அவர் இப்போது பேச வேண்டியது பொருளாதார மேதைகளிடம். ஏனெனில் கொரோனாவால் சீர் குலைந்த இந்தியாவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அவர்களது அனுபவம் நிச்சயம் உதவும்” என்றார்.