(கோப்பு புகைப்படம்)
அரபு அமீரக நாடுகளில் பணியாற்றி வரும் இந்தியர்கள் கொரோனாவால் ஏற்பட்ட வேலையிழப்புகளைத் தொடர்ந்து சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர். மே 7 ஆம் தேதி முதல் 2.75 லட்சம் பேர் விமானத்தில் நாடு திரும்பியுள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
மீண்டும் தாய்நாட்டுக்கு அழைக்கும் மத்திய அரசின் வந்தேபாரத் திட்டம் அறிவிக்கப்பட்டபோது, 5 லட்சம் இந்தியர்கள் இணையதளத்தில் பதிவு செய்திருந்தனர். துபாய் மற்றும் ஷார்ஜாவில் இருந்து இந்தியர்களைத் திரும்ப அழைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் இன்னும் இடங்கள் காலியாக இருக்கின்றன எனக் கூறப்படுகிறது.
கடந்த சில வாரங்களில் அரபு அமீரகத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகம் மூலம் பலரும் அழைத்து வரப்பட்டுள்ளனர். ஒருசில துறைகளைத் தவிர பெரும்பாலானவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருப்பதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சிலரும் இந்தியா திரும்பிச்செல்ல விரும்புகிறார்கள். ஆனால் அவர்களுக்கு விமான டிக்கெட் பெறுவது பற்றிய விழிப்புணர்வு இல்லை என்று தெரியவந்துள்ளதாக துணைத்தூதரகம் டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரையில் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்குச் செல்லும் 90 விமானங்களில் பயணச்சீட்டு பதிவுசெய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.