இந்தியா

16 பேர் பலியான விவகாரம்: போலீஸ் மீது மானேஜர் மனைவி பரபரப்பு புகார்!

16 பேர் பலியான விவகாரம்: போலீஸ் மீது மானேஜர் மனைவி பரபரப்பு புகார்!

webteam

கோயில் பிரசாதம் சாப்பிட்டு 16 பேர் பலியான விவகாரத்தில், கைது செய்யப்பட்ட கோயில் மானேஜரின் மனைவி, போலீஸ் மீது பரபரப்பு புகாரைத் தெரிவித்துள்ளார். 

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் மாவட்டத்தில் உள்ள சுலவாடி கிராமத்தில் கிச்சுகுத்தி மாரம்மா கோயில் உள்ளது. கடந்த சனிக்கிழமை வழங்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட 16 பேர் பலியானார்கள். 90-க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின் றனர். இதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

பிரசாதத்தை உணவுப் பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய்தபோது, அதில் விஷம் கலக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. விசாரணையில் கோயிலை புனரமைப்பதில் இரு பிரிவினரிடையே பிரச்னை ஏற்பட்டதில், ஒரு தரப்பினர் பிரசாதத்தில் விஷம் கலந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, மடாதிபதி மகாதேவசாமி, கோவில் மானேஜர் மாதேஷ், அவர் மனைவி அம்பிகா, உணவில் விஷம் கலப்பதற்காக அழைத்து வரப்பட்ட தோடய்யா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பின்னர் கோயிலுக்கு சென்று எப்படி விஷத்தை கலந்தனர் என்பது பற்றி விசாரித்தனர்.

இந்நிலையில் அம்பிகாவின் வீட்டுக்கு போலீசார் நேற்று அவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவர் வீட்டில் இருந்து விஷம் கலந்த பாட்டில்களை எடுத்தனர். அப்போது அம்பிகா, திடீரென கத்தினார். ’’என் வீட்டுக்குள் போலீசாரே விஷப் பாட்டில்களை வைத்துவிட்டு நான் வைத்ததாக எடுக்கின்றனர். என்னை அடித்து குற்றத்தை ஒப்புக்கொள்ள சொல்கிறார்கள். பிரசாதத்தில் நான் விஷம் கலக்கவில்லை. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்’’ என்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அம்பிகாவின் பேச்சை மறுத்த போலீசார், ‘’அம்பிகாவை கைது செய்த உடனேயே அவர் வீடு பூட்டப்பட்டு விட்டது. பிறகு எப்படி நாங்கள் கொண்டு போய், விஷப்பாட்டிலை அங்கு வைக்க முடியும்?” என்றனர்.