இந்தியா

மாட்டு வண்டிக்கு அபராதம் விதித்த போக்குவரத்து காவலர்கள்

மாட்டு வண்டிக்கு அபராதம் விதித்த போக்குவரத்து காவலர்கள்

webteam

மோட்டார் வாகன சட்டத்தின்படி மாண்டு வண்டிக்கு அபராதம் விதித்த சம்பவம் டேராடூனில் நடந்துள்ளது. 

விபத்துகளை குறைக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டம் கடந்த 1 ஆம் தேதி முதல் பல மாநிலங்களில் அமலுக்கு வந்துள்ளது. போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோருக்கு அதிக அபராதம் விதிக்க வகை செய்யும் இந்த சட்டத்துக்கு மக்களிடம் கடும் எதிர்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில் புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி மாட்டு வண்டிக்கு அபராதம் விதித்த சம்பவம், டேராடூனில் நடந்துள்ளது. 

டேராடூனின் புறநகர் பகுதியில் உள்ள சார்பா கிராமத்தைச் சேர்ந்தவர் ரியாஸ் ஹாசன். கடந்த சனிக்கிழமை, இவர் தனக்கு சொந்தமான மாட்டு வண்டியை, தனது வயலுக்கு வெளியே, சாலையின் ஓரத்தில் நிறுத்தியிருந்தார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் பங்கஜ் குமார் தலைமையிலான காவலர்கள் மாட்டுவண்டியை பார்த்ததும் தங்கள் வாகனத்தை நிறுத்தினர்.  

வண்டியின் அருகில் யாருமில்லாததால், அந்த பகுதியில் இருந்தவர்களிடம், அது யார் வண்டி என்று கேட்டுள்ளனர். அவர்கள் கூறியதை அடுத்து ரியாஸ் வீட்டுக்கு மாட்டு வண்டியை ஓட்டிச் சென்று, ஆயிரம் ரூபாய்க்கான அபராதத் தொகையை எழுதி ரசீதை ரியாஸ் வீட்டில் கொடுத்தனர். ஆச்சரியமடைந்த ரியாஸ், ’எனது வயலுக்கு வெளியே வண்டியை நிறுத்தி இருந்தேன். இதற்கு ஏன் அபராதம் விதித்தார்கள் என்று தெரியவில்லை. மோட்டார் வாகனச் சட்டத்துக்குள் மாட்டு வண்டிகள் வராதபோது ஏன் அபராதம் விதித்தார்கள்?’ என குழப்பமடைந்தார். இதுபற்றி சாஹஸ்புர் காவல் நிலையம் சென்று விசாரித்தபோது, அந்த ரசீதை கேன்சல் செய்துள்ளனர்.

இதுபற்றி சாஹஸ்புர் காவல் நிலைய அதிகாரி கூறும்போது, ’’அக்கம் பக்கத்து கிராமத்தின் சட்டவிரோத சுரங்கங்களில் இருந்து எடுக்கும் மணலை, மாட்டு வண்டிகளில் கொண்டு செல்வதாக தகவல் வந்தது. அதன்படி அங்கு சென்ற காவலர்கள் சோதனை செய்தனர். ரியாஸின் வாகனமும் அதற்கு பயன்பட்டிருக்கலாம் என காவலர்கள் சந்தேகம் அடைந்தனர். இருட்டாக இருந்தால், பில் புக் மாறிவிட்டது. புதிய மோட்டர் வாகன பில் புக்கில் இருந்து அபராதம் விதித்துவிட்டனர்’’ என்றார்.