இந்தியா

சபரிமலை சன்னிதானத்தில் 'பூட்ஸ்' அணிந்து நின்ற போலீஸார் ! பரிகார பூஜை நடத்திய தந்திரி

சபரிமலை சன்னிதானத்தில் 'பூட்ஸ்' அணிந்து நின்ற போலீஸார் ! பரிகார பூஜை நடத்திய தந்திரி

webteam

சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதானத்தில் திருநங்கைகளை கடந்த செவ்வாய்க்கிழமை போலீஸார் பாதுகாப்புடன் சுவாமி தரிசனம் செய்வதற்காக அழைத்து வந்தனர். அப்போது ஐயப்பன் சன்னிதானத்துக்கு போலீஸார் பூட்ஸ் அணிந்தும், லத்தியை எடுத்துக்கொண்டும் வந்துள்ளனர். அதுவும் புனிதமாக கருதப்படும் சுவாமி ஐயப்பன் இருக்கும் கருவறையில் இருந்து 20 மீட்டர் இடைவெளியில் போலீஸார் பூட்ஸ்களுடன் வந்துள்ளனர். இது குறித்து அறிந்த தேவஸம் போர்டு செயல் அதிகாரி சதீஷ்குமார், ஐயப்பன் கோவில் தலைமை தந்திரியுடன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து கோயிலின் சன்னிதானம் புனித நீரால் சுத்தம் செய்யப்பட்டு, ஐயப்பன் ஸ்லோகங்கள் சொல்லப்பட்டது.

பொதுவாக சபரிமலை ஐயப்பன் கோவில் என்றில்லை, எந்தவொரு கோவிலிலும் செருப்பு, பூட்ல், ஷூ கால்களுடன் செல்லக்கூடாது என்பது அடிப்படை. சபரிமலை கோவிலில் கூட ஏராளமான போலீஸார், கமாண்டோக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டாலும் பூட்ஸ் அணிவதில்லை. ஆனால், சன்னிதானத்தில் பூட்ஸ் கால்களுடன் போலீஸார் நுழைந்தது, இப்போது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட விவகாரத்தால் ஐயப்ப பக்தர்களின் வருகை மிகவும் குறைவாக இருந்தது. இதனைத் தொடர்ந்து ஏராளமான பெண்ணியவாதிகள் நுழைய முற்பட்டும் முடியாததால் பெரும் பிரச்சனைகள் ஏற்பட்டது. இன்னும் கூட சபரிமலை சன்னிதானம் உள்ளிட்டப் பகுதிகளில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. 

இந்நிலையில், கேரளாவின் எர்ணாகுளம், கோட்டயம், கொல்லம் பகுதிகளைச் சேர்ந்த அவந்திகா, அனன்யா, திப்தி, ரேஞ்சுமோல் ஆகிய நான்கு திருநங்கைகள் இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்வதற்காக எருமேலிக்கு சென்றனர். கடந்த 16 ஆம் தேதி அவர்களை அங்கிருந்த ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தியதால், பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் திருநங்கைகளை திருப்பி அனுப்பினர். இதையடுத்து திருநங்கைகள் 4 பேரும் கேரள காவல்துறையிடமும், சபரிமலை நிலவரத்தை ஆய்வு செய்ய கேரள உயர்நீதிமன்றம் நியமித்த குழுவிடமும் மனுவாக எழுதிக் கொடுத்தனர். இதனையடுத்து திருநங்கைகள் 4 பேரும் சபரிமலை கோயிலில் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. 

மேலும் தலைமை தந்திரியும் அனுமதி அளித்தார். அதன்படி திருநங்கைகள் நான்கு பேரும் செவ்வாய்க்கிழமை நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.  கருப்பு சேலை அணிந்து, தலையில் இருமுடி கட்டுடன் சென்ற திருநங்கைகள் 18ஆம் படி வழியாகச் சென்று சாமி தரிசனம் செய்தனர். அப்போதுதான் போலீஸார் பூட்ஸ் கால்களுடனும் லத்தியுடன் வந்ததாகவும் தெரிகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த பந்தள அரசு குடும்பத்தின் தலைவர் சசிகுமார் வர்மா "சன்னிதானத்தில் பூட்ஸ் அணிந்து வருவது மரபை மீறும் செயல். இதை வேண்டுமென்று செய்தார்களா இல்லை ஏதேச்சையாக நடந்ததா என்று தெரியவில்லை. எனினும் இது கண்டத்துக்குறியது. இந்தச் சம்பவம் குறித்து சபரிமவலை நிலவரத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டிருக்கும் குழுவிடமும் புகார் அளித்துள்ளோம்" என்றார் அவர்.

போலீசாரின் இந்த அவமரியாதைக்குரிய சம்பவம் சன்னிதானத்தை அசுத்தம் செய்து உள்ளதால், சபரிமலையில் பரிகார சுத்திகிரியை பூஜைகள் நடத்த தந்திரி கண்டரரு ராஜீவரு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, சன்னிதானத்தில் நேற்று பரிகார சுத்தி கிரியை பூஜைகள் நடந்தது.