இந்தியா

பாகிஸ்தான் கொடி என நினைத்து முஸ்லிம் லீக் கட்சிக் கொடியை அகற்றிய போலீசார்!

பாகிஸ்தான் கொடி என நினைத்து முஸ்லிம் லீக் கட்சிக் கொடியை அகற்றிய போலீசார்!

JustinDurai

காரின் முன்பகுதியில் கட்டப்பட்டிருந்த முஸ்லிம் லீக் கட்சிக் கொடியை பாகிஸ்தான் நாட்டு கொடி என நினைத்து அகற்றிவிட்டு, இந்திய தேசிய கொடியை போக்குவரத்து போலீசார் பொருத்தினர்.

கர்நாடக மாநிலம் பெங்களூர் எலெக்ட்ரானிக் சிட்டி அருகேயுள்ள வீரசந்திரா பகுதியில் நேற்று காலை எலெக்ட்ரானிக் சிட்டி போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக தமிழ்நாட்டில் இருந்து ஒரு கார் பெங்களூர் நோக்கி வந்தது. 

அந்த காரின் முன்பகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கொடி கட்டப்பட்டு இருந்தது. இதனை கவனித்த போக்குவரத்து போலீசார் அது பாகிஸ்தான் நாட்டு கொடி என சந்தேகித்து, காரை தடுத்து நிறுத்தினர். பின்னர் காரில் வந்த 2 பேரிடம் கொடியை கட்டியது பற்றி விசாரித்துள்ளனர்.  ஆனால் அவர்கள் சரியாக பதில் எதுவும் சொல்லவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து காரில் கட்டப்பட்டிருந்தது பாகிஸ்தான் கொடி என்று தவறாக புரிந்து கொண்ட போலீசார், அந்தக் கொடியை அகற்றிவிட்டு இந்திய தேசிய கொடியை காரின் முன்பகுதியில் பொருத்தி அங்கிருந்து காரை அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் காரில் கட்டப்பட்டிருந்தது  பாகிஸ்தான் நாட்டு கொடி அல்ல, அது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கொடி என்று இரு கொடிகளின் படங்களையும் ஒப்பிட்டு விளக்கம் தெரிவித்து வருகின்றனர்.