இந்தியா

பிரணாப் முகர்ஜியின் புத்தகத்தால் சர்ச்சை: மகன் Vs மகள்... என்னதான் நடக்கிறது?

பிரணாப் முகர்ஜியின் புத்தகத்தால் சர்ச்சை: மகன் Vs மகள்... என்னதான் நடக்கிறது?

Veeramani

மறைந்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி எழுதிய புத்தகம் தொடர்பாக சர்ச்சை நிலவுகிறது. இன்னும் வெளிவராத இந்தப் புத்தகம் தொடர்பாக பிரணாப் முகர்ஜியின் மகனும் மகளும் திடீர் சண்டையில் ஈடுபட்டுள்ளதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ல் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இந்தியாவின் உயர் பதவிகளை அலங்கரித்தவர் பிரணாப் முகர்ஜி. 1969-ம் ஆண்டு ராஜ்யசபா எம்பி-யாக தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய பிரணாப் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் நிதியமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சர், திட்டக் குழு துணைத் தலைவர், குடியரசுத் தலைவர் என இந்தியாவின் உயர் பதவிகளை வகித்தார். அவர் வகிக்காத ஒரே பதவி பிரதமர் பதவி மட்டுமே. அதற்கான வாய்ப்பு இருந்தும் சில காரணங்கள் அது கை நழுவி போனது.

இதற்கிடையே, பிரணாப் உயிருடன் இருந்த காலத்தில், குறிப்பாக குடியரசுத் தலைவராக இருந்த காலத்தை நினைவுகூறும் வகையில் 'தி பிரசிடென்ஷியல் இயர்ஸ்' என்ற புத்தகத்தை எழுதியிருந்தார். இந்தப் புத்தகத்தை பிரபல ரூபா பதிப்பகம் அடுத்த மாதம் வெளியிட இருக்கிறது. அதற்கு முன்னதாக, புத்தகத்தின் சில பகுதிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது ரூபா பதிப்பகம். இதுதான் பிரச்னைக்கு ஆரம்ப புள்ளி.

ரூபா பதிப்பகம் வெளியிட்ட அந்த பக்கத்தில், "ஜனாதிபதியாக நான் பதவி வகித்த காலத்தில் காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் ஆட்சியை தக்கவைப்பதிலேயே கவனம் செலுத்தினர். அந்தநேரத்தில், காங்கிரஸின் அரசியல் தள்ளாட்டம் கண்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைமை தேவையான இடத்தில் தன் கவனத்தை இழந்துவிட்டது" என்று பிரணாப் குறிப்பிட்டதாக கூறப்பட்டிருந்தது.

இந்த ட்வீட் வெளியான சில மணி நேரங்களில் பிரணாப் முகர்ஜியின் மூத்த மகன் அபிஜித் முகர்ஜி, ரூபா பதிப்பகம் மற்றும் அதன் நிறுவனர் கபிஷ் மெஹ்ரா ஆகியோரை டேக் செய்து, `` `தி பிரசிடென்ஷியல் இயர்ஸ்' புத்தகத்தை எழுதியவரின் மகன் நான். உங்களுடைய பதிப்பகம் திட்டமிட்டுள்ள புத்தகத்தின் சில பகுதிகள் மீடியாவில் வெளியாகியிருக்கிறது. என்னிடம் முறையாக அனுமதி பெறாமலே அந்தப் புத்தகத்தின் சில வரிகள் காட்சிப்படுத்தப்படுவதை நீங்கள் நிறுத்திவையுங்கள். என் தந்தை இறந்துவிட்டார். இந்த தருணத்தில் அவர் எழுதிய புத்தகத்தை வெளியிடும் முன்பு நான் ஒருமுறை அதை முழுவதும் படிக்க விரும்புகிறேன். எனது தந்தை உயிருடன் இருந்திருந்தாலும், அவரும் இதையேதான் செய்திருப்பார். எனவே, எனது அனுமதி பெறாமல் நீங்கள் இந்தப் புத்தகத்தை வெளியிடக்கூடாது" என்று கூறியிருந்தார்.

இதற்கடுத்த சில மணி நேரங்களில் பிரணாப் முகர்ஜியின் மகளும், அபிஜித் முகர்ஜியின் சகோதரியுமான ஷர்மிஸ்தா முகர்ஜி, இந்தப் பதிவுக்கு கோபமாக எதிர்வினை ஆற்றியுள்ளார். `` `தி பிரசிடென்ஷியல் இயர்ஸ்' புத்தகத்தை எழுதியவரின் மகள் நான்'' என்று தனது அண்ணனைபோல தொடங்கிய ஷர்மிஸ்தா, ``தந்தையின் கடைசி புத்தகத்தை வெளியிடுவதில் எந்தக் குழப்பமும் ஏற்படுத்த வேண்டாம் என என் அண்ணன் அபிஜித்தை கேட்டுக்கொள்கிறேன். இந்தப் புத்தகம், தந்தை இறக்கும்முன் கடைசியாக எழுதியது. அவர் இறுதியாக ஒருமுறை படித்து, தவறுகளே அவரே கைப்பட திருத்திக்கொடுத்தப் பிறகுதான் புத்தகம் வெளியாக இருக்கிறது. இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தகவல் அனைத்தும் தெளிவாக உள்ளது என்று அவரே இறக்கும் முன் கூறியிருக்கிறார். இந்த புத்தகம் அவரின் சொந்த கருத்துக்கள். தந்தையின் விருப்பத்தை மீறி யாரும் புத்தக வெளியீட்டை யாரும் தடுக்க முயன்று மலிவான விளம்பரம் தேடிக் கொள்ள முயற்சிக்க வேண்டாம். அப்படி செய்வது தந்தைக்கு இழைக்கப்படும் அவமரியாதை" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் புத்தகத்தின் பெயரை 'The Presidential years' என்பதற்குப் பதிலாக 'The Presidential Memoirs' என தவறாக தனது அண்ணன் குறிப்பிட்டு இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரணாப்பின் மகன் அபிஜித், மகள் ஷர்மிஸ்தா இருவருமே காங்கிரஸ் கட்சியில்தான் இருக்கிறார்கள். இந்தப் புத்தகத்தில் காங்கிரஸ் குறித்து நிறைய விமர்சனங்களை பிரணாப் முன்வைத்து இருக்கிறார். இதனால், புத்தகத்தை வெளியிடுவது தொடர்பாக அண்ணன் - தங்கை இருவரும் வெளிப்படையாக மோதிக்கொள்வது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.