இந்தியா

இடமாற்றம் செய்யப்பட்ட ‘அமர் ஜவான் ஜோதி’- வெடித்த சர்ச்சை

இடமாற்றம் செய்யப்பட்ட ‘அமர் ஜவான் ஜோதி’- வெடித்த சர்ச்சை

webteam

டெல்லி இந்தியா கேட் அருகே பல்வேறு போர்களில் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் நினைவாக சுடர்விட்டு வரும் "அமர் ஜவான் ஜோதி" அணையாவிளக்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேசிய போர் நினைவகத்துடன் இணைக்கப்பட்டது குறித்து சர்ச்சை வெடித்துள்ளது. 50 வருடங்களாக அணையாமல் தொடர்ந்து சுடர்விட்டு வரும் "அமர் ஜவான் ஜோதி" ஏன் தொடரக்கூடாது என்கிற கேள்வியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் எழுப்பியுள்ளனர்.

நாடாளுமன்ற வளாகம் மற்றும் அதன் அருகில் உள்ள "சென்ட்ரல் விஸ்டா" என்று அழைக்கப்படும் பகுதிகளை புனரமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் "அமர் ஜவான் ஜோதி" அணையாவிளக்கு இன்று தேசிய போர் நினைவகத்துடன்  இணைக்கப்பட்டது.

இதற்கு, இந்தியா கேட் அலங்கார வளைவில் 1971-ஆம் வருட போரில் உயிர் நீத்தோர் பெயர்கள் இடம்பெறவில்லை என்றும், அவர்கள் பெயர்களும் தேசிய போர் நினைவகத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு போர்களில் நாட்டுக்காக இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களின் பெயர்கள் தேசிய போர் நினைவகத்தில் வைககப்பட்டுள்ளதாகவும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆகவே நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த அனைத்து வீரர்களுக்கும் ஒரே இடத்தில் அஞ்சலி செலுத்தும் வகையில் தேசிய போர் நினைவகத்தில் அணையாவிளக்கு உருவாக்கப்பட்டுள்ளது என்பது அவர்களுடைய வாதம்.

"அமர் ஜவான் ஜோதி" தற்காலிகமாக அமைக்கப்பட்ட நினைவகம் என்றும், தற்போது நிரந்தர நினைவகமாக போரில் உயிரிழந்த அனைத்து வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் தேசிய போர் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். 50 வருடங்களாக ஒளிவீசி வந்த அமர் ஜவான் ஜோதியை தற்காலிகமானது என எப்படி கருதுவது என்பதே தற்போதைய சர்ச்சையாக எழும்பியிருக்கிறது.

தேசிய போர் நினைவகத்தை முன்பே கட்டமைத்து இருக்க வேண்டும் எனவும், தாமதத்துக்குப் பிறகு தற்போதைய அரசு அந்தப் பணியை முடித்து உள்ளதாகவும் அதிகாரிகள் விளக்கம் அளித்து வருகின்றனர். குடியரசு தினம் உள்ளிட்ட ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முக்கிய நிகழ்வுகளின்போது, பிரதமர், பாதுகாப்பு துறை அமைச்சர் மற்றும் முப்படை தளபதிகள் "அமர் ஜவான் ஜோதி" அணையா விளக்கு சென்று அங்கே மலர் வளையம் வைத்து மரியாதை செய்வது வழக்கம்.

சமீப வருடங்களில் தேசிய போர் நினைவகத்தில் அஞ்சலி செலுத்தப்படுகிறது. இரண்டு நினைவகங்களும் இணைக்கப்படும் நிலையில் வரும் குடியரசு தினம் முதல், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் தேசிய போர் நினைவகத்தில் நாட்டுக்காக உயிரை கொடுத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குடியரசு தினத்துக்கு சில நாட்களே உள்ள நிலையில் இந்த மாற்றம் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "அமர் ஜவான் ஜோதி" அணையா விளக்கு இனி ஒளிராது என்பது தனக்கு சோகம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். நாம் மீண்டும் "அமர் ஜவான் ஜோதி" ஒளிர செய்வோம் என அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

- கணபதி சுப்பிரமணியம்