இந்தியா

நாடாளுமன்றத்தில் தொடரும் மோதல்: அமளிகளுக்கு மத்தியில் தமிழக எம்பிக்கள் பேசியது என்ன?

நாடாளுமன்றத்தில் தொடரும் மோதல்: அமளிகளுக்கு மத்தியில் தமிழக எம்பிக்கள் பேசியது என்ன?

Veeramani

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மூன்றாவது நாளாக எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கூட்டணி கடும் மோதலில் ஈடுபட்டதால் மாநிலங்களவை புதன்கிழமையன்றும் முடங்கியது.

எதிர்க்கட்சிகளை சேர்ந்த 12 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து மாநிலங்களவை மற்றும் மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்முழக்கம் மூலம் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்தனர். ஒருபுறம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டம் நடத்தினார்கள். காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் சஸ்பெண்ட் முடிவை எதிர்த்தாலும், பிற எதிர்க்கட்சிகளுடன் ஒருங்கிணையாமல் தனது கண்டனங்களை தனியாக பதிவு செய்தது.

காலை 11 மணிக்கு அவைகள் கூடியதும் எதிர்கட்சிகள் தொடர் முழக்கங்கள் மூலம் தங்களுடைய எதிர்ப்பை வெளிக்காட்டினர். மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு கேள்வி நேரத்தை கடத்த முயற்சி செய்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களுடைய இருக்கைக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக்கொண்டார். திமுக நாடாளுமன்ற குழு தலைவரான டி.ஆர்.பாலு ரயில்வே துறை தொடர்பான கேள்வி ஒன்றை கேட்டபோது எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் அவர் அருகே பதாகைகளுடன் நின்று கோஷங்கள் எழுப்பினர். அதைப் போலவே தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி கேட்ட போதும், கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதில் அளித்த போதும் முழக்கங்கள் தொடர்ந்தன. மூத்த உறுப்பினரான டி.ஆர்.பாலுவை கூட பேசவிடாமல் நீங்கள் தடுக்கிறீர்கள் என வருத்தம் தெரிவித்த வெங்கையா நாயுடு மாநிலங்களவையை ஒத்தி வைத்தார். இதேபோல ஒத்திவைப்பு மீண்டும் மீண்டும் நடந்து இறுதியாக அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனால், அணை பாதுகாப்பு மசோதா மீதான விவாதம் தடைப்பட்டது.

மூன்றாவது நாளாக மாநிலங்களவை முடங்கிய நிலையில், மக்களவையை நடத்த சபாநாயகர் ஓம் பிர்லா தீவிர முயற்சி செய்தார். ஆரம்பத்தில் எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டாலும், பின்னர் படிப்படியாக சுமூக நிலை திரும்பியது. எதிர்க்கட்சிகளின் முழக்கங்கள் குறைந்த நிலையில், அவசர பிரச்சினைகள் குறித்து பேச பல்வேறு கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி தமிழகத்துக்கு விரைவாக மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி உதவி அளிக்கவேண்டும் எனவும், புதிய பாம்பன் பாலம் கட்டமைப்பதில் குடியிருப்புகள் பாதிக்கப்படக் கூடாது எனவும் வலியுறுத்தினார். தமிழகத்தைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய தொகுதி தொடர்பான முக்கிய விவகாரங்களை மக்களவையில் பதிவு செய்தார்கள்.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு மக்களவை கூடியபோது எதிர்க் கட்சிகளை சேர்ந்தவர்கள் முழக்கங்களை கைவிட்டு அவை நடவடிக்கையில் கலந்து கொண்டதால், செயற்கை கருத்தரிப்பை ஒழுங்குபடுத்தும் மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி சார்பாக இந்த விவாதத்தில் கலந்துகொண்ட கார்த்தி சிதம்பரம், அரசு யார் செயற்கை கருத்தரிப்பு முறையில் பலன் அடையலாம் என்பதற்கு விதிக்க உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என வலியுறுத்தினார்.

பாரதிய ஜனதா கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், நேஷனல் கான்ஃபரன்ஸ், அதிமுக மற்றும் பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இந்த விவாதத்தில் கலந்து கொண்டன. இந்தக் கூட்டத்தொடரில் முதன்முறையாக ஒரு மசோதா மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மருத்துவர்களான மக்களவை உறுப்பினர்களையே பல கட்சிகள் இந்த விவாதத்தில் முன்னிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

அதிமுக சார்பாக பேசிய ஓ. பி. ரவீந்திரநாத் இந்த மசோதாவுக்கு வரவேற்பு தெரிவித்தார். குழந்தைகள் இல்லாத தம்பதிகளில் ஒரு சதவீதம் மட்டுமே தற்போது செயற்கை கருத்தரிப்பு முறையில் பயன்படுத்துவதாகவும் புதிய சட்டம் அமலுக்கு வந்தால் மேலும் பலர் பலனை அடைவார்கள் என்றும் பேசிய அவர், இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தார்.

முஸ்லிம் லீக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான நவாஸ்கனி இந்த மசோதாவில் பல குறைபாடுகள் உள்ளதாகவும் அவற்றை அரசு சீர் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். குறிப்பாக செயற்கை கருத்தரிப்பு முறையில் ஆபத்துகள் இருப்பதால் அதற்கேற்ற வகையில் காப்பீடு தேவை என்பது மசோதாவில் கட்டாயமாக்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார்.

- கணபதி  சுப்பிரமணியம்