assam, supreme court x page
இந்தியா

புல்டோசர் நடவடிக்கை| தடையை மீறி 47 வீடுகள் இடிப்பு.. அசாம் அரசுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்!

Prakash J

உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில், ‘புல்டோசர் நடவடிக்கை’ என்கிற பெயரில், குற்றம்செய்பவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்த புல்டோசர் நடவடிக்கை அதிகம் சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்கள், இஸ்லாமியர்களின் வீடுகள் மீதே குறிவைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தன. இந்த புல்டோசர் நடவடிக்கை சட்டத்திற்குப் புறம்பானது எனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வரும் அக்டோபர் 1 (நாளை) வரை புல்டோசர் நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் இந்த உத்தரவை மீறி ஆங்காங்கே புல்டோசர் நடவடிக்கைகள் தொடர்ந்துவருகிறது. சமீபத்தில் மும்பையில் தாராவி பகுதியில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டது என்று அங்கிருந்த மசூதியை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் கிளம்பினர். ஆனால் தாராவி மக்கள் பெரிய அளவிலான போராட்டம் நடத்தியதை அடுத்து அந்த முடிவு கைவிடப்பட்டது.

இதையும் படிக்க: ’அனுபம்கேர்’ படத்துடன் ரூ.500 கள்ளநோட்டுகள்! வியாபாரியை ஏமாற்றி 2,100 தங்கம் எடுத்துச்சென்ற சம்பவம்!

இதற்கிடையே அசாமில் காம்ரூப் [Kamrup] மாவட்டத்தில் உள்ள சோனாபூரில், சட்டவிரோத ஆக்கிரமிப்பு எனக் கூறி 47 குடும்பங்களின் வீடுகளை அரசு இடித்துள்ளது. ஆனால் அந்த நிலங்களின் உரிமையாளர்களிடம் பல வருடங்களுக்கு முன்பே அனுமதி பெற்றுத்தான் தாங்கள் அங்கு வசித்து வருகிறோம் என்று அம்மக்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, தங்களிடம் நிலத்தின் அசல் ஆவணங்கள் இல்லை என்றும், தங்களுக்கு வழங்கப்பட்ட பவர் ஆஃப் அட்டர்னி ஒப்பந்தத்தின் மூலம் அந்த நிலத்தில் வசித்து வருவதாகவும் தங்கள் அவமதிப்பு மனுவில் கூறியுள்ளனர்.

மேலும் காம்ரூப் மாவட்ட சுற்றுவட்டாரத்தில் அதேபோல மக்கள் வசிக்கும் வீடுகள் எந்த முன்னறிவிப்பும் இன்றி இடிக்கப்பட்டுள்ளன. எனவே வீடுகளை இழந்த கட்சுதொலி பதார் கிராமத்தை சேர்ந்த 47 குடும்பங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், நீதிமன்ற அனுமதி இல்லாமல் இடைக்காலத் தடை அமலில் உள்ளபோது வீடுகளை இடித்துள்ளதால் அசாம் அரசுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளது. நாட்டின் குடிமக்களுக்கு அவர்கள் இருப்பதற்கான இடத்தையும், வாழ்வாதாரத்தையும் மறுப்பது சட்டப்பிரிவு 14, 15, 21 ஆகியவற்றின் கீழ் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாகும் என்றும் உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.

இதையும் படிக்க: முக்கிய செய்தி|அக். மாதத்தில் 15நாட்கள் வங்கிகள் விடுமுறை; எந்த மாநிலம்,எந்தெந்த தேதிகள்? முழுவிபரம்