பீகாரில் ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் முதன்முறையாக இன்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது. பீகாரில் 8, ஜார்கண்டில் 3, பஞ்சாப்பில் 13, மேற்கு வங்காளத்தில் 9, இமாசலப் பிரதேசத்தில் 4, மத்திய பிரதேசத்தில் 8, உத்தரப் பிரதேசத்தில் 13, சண்டிகரில் ஒன்று என 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.
ஒரு மணி நேர நிலவரப்படி, வாக்குப் பதிவு சதவிகிதம் வெளியாகியுள்ளது. அதன்படி, 39.85 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. இதுதவிர தமிழகத்தில் சூலூர் உள்ளிட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தலும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பீகாரில் ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் முதன்முறையாக இன்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். சபா மற்றும் ஃபாரா என்ற இரு சகோதரிகள் பிறக்கும்போதே தலையொட்டி பிறந்துள்ளனர். 18 வயதை நிறைவு செய்த அவர்கள் தற்போது முதன்முறையாக தங்களது வாக்கினை பதிவு செய்துள்ளனர். தலையொட்டி பிறந்திருந்தாலும் இருவருக்கும் தனித்தனி வாக்காளர் அடையாள அட்டை அளிக்கப்பட்டது. அதன்படி இருவரும் தனித்தனியாகவே தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.