நடனம், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் நபர்கள், சமீபகாலமாக எதிர்பாராதவிதமாக திடீரென கீழேவிழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாகி வருகின்றன. அதிலும், கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் பலர் மாரடைப்பால் திடீரென உயிரிழப்பது தொடர்கதையாகி வருகின்றன. அந்த வகையில், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவர், மைக் பிடித்துப் பேசிக் கொண்டிருந்தபோதே சுருண்டு விழுந்து உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் சங்கத்தின் உறுப்பினரும், காங்கிரஸ் கட்சி நிர்வாகியுமான சி.கே.ரவிச்சந்திரன் (63), பெங்களூரு பிரஸ் கிளப்பில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் நேற்று கலந்துகொண்டார். முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடரும் ஆளுநரின் முடிவுக்கு எதிராக இந்த சந்திப்பு நடைபெற்றது.
நேற்று மதியம் 12.45 மணிக்கு, முதல்வருக்கு எதிரான ஆளுநரின் நடவடிக்கை குறித்து அவர் மைக் பிடித்து பேசியபோது, அவரது மடியில் இருந்த மொபைல் போன் தவறி கீழே விழுந்தது. அவர் போனைத்தான் கீழே குனிந்து எடுக்கப் போகிறார் என எல்லோரும் எதிர்பார்த்த நிலையில், அவர் அப்படியே சரிந்து விழுந்தார். அப்போது அவர் மூக்கில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சையும் அளித்தனர். அதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். ஆனாலும், அவர் ஏற்கெனெவே இறந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவருடைய மறைவுக்கு முதல்வர் சித்தராமையா இரங்கல் தெரிவித்துள்ளார்.