இந்தியா

காந்தி உருவ பொம்மையை சுட்ட சம்பவம்: காங்கிரஸ் இன்று ஆர்ப்பாட்டம்!

webteam

மகாத்மா காந்தியின் உருவப் பொம்மையை துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சி இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

மகாத்மா காந்தியின் நினைவு நாளான கடந்த 30 ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில், இந்து மகாசபையை சேர்ந்த சிலர் காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டும், தீ வைத்தும் எரித்தனர். கோட்சேவுக்கு ஆதரவாக கோஷங் களும் எழுப்பினர். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பானது. இதையடுத்து இதில் தொடர்பு டைய சிலர் கைது செய்யப்பட்டனர். 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தைக் கண்டித்து இன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்தது. இதுபற்றி அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணு கோபால் கூறும்போது, ‘இந்து மகா சபையை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள காந்தி சிலை அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டமும், பேரணியும் நடைபெறும்’ என்று தெரிவித்தார். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தியின் சிலை முன்பு காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.