இந்தியா

கொச்சி மாநகராட்சி காங்கிரஸ் மேயர் வேட்பாளர், பாஜகவிடம் 1 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி

கொச்சி மாநகராட்சி காங்கிரஸ் மேயர் வேட்பாளர், பாஜகவிடம் 1 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி

Veeramani

கேரளா உள்ளாட்சி தேர்தலில், கொச்சி மாநகராட்சி காங்கிரஸ் மேயர் வேட்பாளர், பாஜகவிடம் 1 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.

கேரள உள்ளாட்சி தேர்தலில், கொச்சி மாநகராட்சி காங்கிரஸ் மேயர் வேட்பாளர் என் வேணுகோபால் பாஜக வேட்பாளரிடம் ஒரு வாக்கு வித்தியாசத்தில், கொச்சி கார்ப்பரேஷன் நார்த் ஐலேண்ட் வார்டில் தோல்வியடைந்துள்ளார். "இது ஒரு உறுதியாக வெல்லக்கூடிய சீட். என்ன நடந்தது என்று என்னால் சொல்ல முடியவில்லை. கட்சியில் எந்த பிரச்சனையும் இல்லை. வாக்களிக்கும் இயந்திரத்தில் சிக்கல் இருந்தது. அதுதான் பாஜகவின் வெற்றிக்கு காரணமாக இருக்கலாம்" என்று  வேணுகோபால் கூறினார். "வாக்களிக்கும் இயந்திர பிரச்சினையுடன் நீதிமன்றத்திற்கு செல்ல நான் இதுவரை முடிவு செய்யவில்லை. சரியாக என்ன நடந்தது என்பதை சரிபார்க்கவேண்டும்" என்றும் அவர்  கூறினார்.

கேரளாவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்கு எண்ணுதல் மாநிலம் முழுவதும் 244 மையங்களில் நடைபெற்று வருகிறது.  இந்த தேர்தலில் பெரும்பாலான இடங்களை இடதுசாரிகள் கூட்டணி வெற்றிபெற்றுள்ளது. இந்த உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 6 மாநகராட்சிகளில் 4 இல் இடதுசாரியும், 2 இல் காங்கிரஸூம் முன்னணியில் உள்ளது. மொத்தமுள்ள 87 நகராட்சிகளில் காங்கிரஸ் 45-லும், இடதுசாரிகள் 35யிலும், பாஜக 2 யிலும் முன்னணியில் உள்ளது. 14 மாவட்ட பஞ்சாயத்துகளில் 10 இல் இடதுசாரிகளும், 4 இல் காங்கிரஸும் முன்னணியில் உள்ளது. மொத்தமுள்ள 941 கிராம பஞ்சாயத்துகளில் 514 இல் இடதுசாரிகளும், 377இல் காங்கிரஸூம், 22 இல் பாஜகவும் முன்னணியில் உள்ளன.