நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேலைகள் வேகம்பிடித்து வருகின்றன. கட்சிகளுக்குள் கூட்டணி உறுதி செய்யப்பட்டு தொகுதிகள் பங்கு பிரிக்கப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக மத்தியில் ஆளும் பாஜக, கடந்த மார்ச் 2-ஆம் தேதி 195 இடங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைமை இன்று (மார்ச் 8) 39 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, அதிகபட்சமாக கேரளாவில் 16 இடங்களையும், கர்நாடகாவில் 7 இடங்களையும், அதைத்தொடர்ந்து சத்தீஸ்கரில் 6 இடங்களையும் அறிவித்துள்ளது. தெலங்கானாவில் 4 இடங்களையும், மேகாலயாவில் 2 இடங்களையும், திரிபுரா, சிக்கிம், லட்சத்தீவு, நாகலாந்து ஆகிய மாநிலங்களில் தலா 1 இடத்தையும் அறிவித்துள்ளது.
அதன்படி, மூத்த காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி, மீண்டும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூரும், ஆலப்புழாவில் கே.சி.வேணுகோபாலும் திருச்சூர் தொகுதியில் கே.முரளிதரனும் போட்டியிடுகின்றனர்.
கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ், பெங்களூரு ஊரக தொகுதியில் போட்டியிடுகிறார். கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரின் மனைவியும் முன்னாள் முதல்வர் பங்காரப்பாவின் மகளுமான கீதா சிவராஜ்குமார் ஷிமோகாவில் போட்டியிடுகிறார்.