இந்தியா

தங்கக்கடத்தல் விவகாரத்தில் தொடர்பு? கேரள முதல்வர் பதவி விலகக்கோரி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

தங்கக்கடத்தல் விவகாரத்தில் தொடர்பு? கேரள முதல்வர் பதவி விலகக்கோரி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

நிவேதா ஜெகராஜா

தங்கக் கடத்தல் விவகாரத்தில் கேரள முதல்வர் பினராய் விஜயன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு தொடர்பு இருப்பதாக இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருந்த ஸ்வெப்னா நேற்று வாக்குமூலம் அளித்து இருந்த நிலையில், முதல்வர் பினராய் விஜயன் பதவி விலக கோரி திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் கடத்தி வரப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான தங்கம் கடந்த ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி சுங்கத் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக சுங்கத் துறை, தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகள் விசாரித்து வருகின்றன. இந்த முறைகேட்டில் முக்கிய குற்றவாளிகளாக ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் முன்னாள் ஊழியரான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயா் ஆகியோரை என்ஐஏ அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி பெங்களூரில் கைது செய்தனா்.

தொடா்ந்து இந்த வழக்கில் தொடா்புடைய கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலா் எம்.சிவசங்கா், ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் மற்றொரு முன்னாள் ஊழியா் சரித் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனா். இவ்வழக்கில் முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக ஸ்வப்னா நேற்று வாக்குமூலம் அளித்தார். அவரது மனைவி கமலா, மகள் வீனா, மற்றும் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள காங்கிரஸ் கட்சி இன்று திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகம் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போடப்பட்டிருந்த தடுப்புகளை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து கேரள காவல்துறையினர் கலைக்க முற்பட்டனர். இந்த விவகாரத்தை கையில் கொண்டு மேலும் பல கட்ட போராட்டங்களை நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.