இந்தியா

“காங். இதையெல்லாம் செய்யட்டும்” - கட்சியில் சேர மறுத்த நிலையில் பிரஷாந்த் கிஷோர் ட்வீட்

“காங். இதையெல்லாம் செய்யட்டும்” - கட்சியில் சேர மறுத்த நிலையில் பிரஷாந்த் கிஷோர் ட்வீட்

ச. முத்துகிருஷ்ணன்

கட்சியில் சேர மறுப்பு தெரிவித்த நிலையில் “காங்கிரஸ் கட்சிக்கு என்னை விட தலைமையே தேவை” என்று பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலை காங்கிரஸ் எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து அக்கட்சியின் மேலிடத் தலைவர்கள், I-PAC நிறுவனரும் தேர்தல் வியூக வல்லுநருமான பிரஷாந்த் கிஷோருடன் கடந்த வாரம் ஆலோசனை நடத்தினர். பிரஷாந்த் கிஷோர் விரைவில் காங்கிரஸ் கட்சியில் சேருவார் என்று தகவல்கள் பரவின.

பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் சேர மறுத்துவிட்டதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா அறிவித்துள்ளார். இருப்பினும் அவர் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தேர்தல் வியூக வல்லுநராக செயல்படுவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு தன்னை விட தலைமையே தேவை என்று பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “அதிகாரம் பெற்ற செயல் குழுவின் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சியில் சேரவும் மற்றும் தேர்தல்களுக்கு பொறுப்பேற்கவும் வழங்கப்பட்ட வாய்ப்பை நான் நிராகரித்தேன். எனது தாழ்மையான கருத்துப்படி, என்னை விட கட்சிக்கு தலைமைமையே தேவை! ஆழமாக வேரூன்றியிருக்கும் கட்டமைப்பு பிரச்சனைகளை மாற்றும் சீர்திருத்தங்கள் மூலம் சரி செய்ய வேண்டும் . ” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.