rahul gandhi எக்ஸ் தளம்
இந்தியா

“சக்கரவியூகத்தில் 6 பேர்” - பட்ஜெட் விவாதத்தில் பாஜக அரசைக் கடுமையாகச் சாடிய ராகுல் காந்தி!

Prakash J

18வது மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்ற நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த மாதம் பதவி ஏற்றது. இந்த நிலையில், 2024-2025ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்தார்.

ஒரு மணி நேரம் 25 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்தார். இதைத் தொடர்ந்து மத்திய பட்ஜெட் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த பட்ஜெட் குறித்து கடும் விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ளன. இந்நிலையில் பட்ஜெட் குறித்து காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று (ஜூலை 29) உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர், “மகாபாரதத்தில் 6 பேர் சக்கர வியூகத்தை அமைத்து கட்டுப்படுத்தினர். தற்போதும் நரேந்திர மோடி, அமித் ஷா, மோகன் பகவத், அஜித் தோவல், அம்பானி, அதானி என 6 பேரின் சக்கர வியூகத்தில் இந்தியா சிக்கிக் கொண்டுள்ளது” என்றார்.

அப்போது, அம்பானி, அதானி பெயர்களை உச்சரித்ததால், ஆளுங்கட்சியை சேர்ந்த எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவ்வாறு பேசக்கூடாது என மக்களவை சபாநாயகரும் கூறினார். இதனையடுத்து, அம்பானி, அதானி பெயர்களை A1, A2 என உச்சரித்த ராகுல் காந்தி, “பிரதமர் நரேந்திர மோடி அவர்களைப் பாதுகாக்கிறார். நாம் இதனை புரிந்துகொள்ளலாம்” என்றார்.

இதையும் படிக்க:சாவர்க்கர் சர்ச்சை கருத்து| வரலாற்றைத் திரித்ததாக விமர்சனம்.. மன்னிப்பு கேட்ட இயக்குநர் சுதா கொங்கரா

தொடர்ந்து பேசிய அவர், “இந்தியாவில் தாமரை வடிவத்தில் சக்கர வியூகம் அமைந்துள்ளது. இந்த சக்கர வியூகத்தால் மாநில அரசுகள் ஒடுக்கப்படுகின்றன. பாஜகவின் இந்த சக்கர வியூகத்தை எதிர்த்து நாங்கள் போராடி வருகிறோம். இந்த சக்கர வியூகத்தை நிச்சயம் நாங்கள் தகர்த்து எறிவோம்.

நாட்டின் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒருவித அச்சத்தில் உள்ளனர். பாஜக ஒருவரை மட்டுமே பிரதமராக அனுமதிக்கிறது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரதமராக விரும்பினால், அவர் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும்.

மத்திய பட்ஜெட்டானது, பெருமுதலாளிக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பின்மை என்பதை மோடி அரசானது வினாத்தாள் கசிவு என்பதாகிவிட்டது.

அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை மூலம் எதிர்க்கட்சிகளை மத்திய அரசு ஒடுக்குகிறது. ஜிஎஸ்டி என்கிற வரி பயங்கரவாதத்தை மத்திய அரசு ஏவிவிட்டது. ஜிஎஸ்டி என்பது வரிவிதிப்பு தீவிரவாதம். ஜிஎஸ்டி மூலம் சிறு, குறு தொழில்கள் நசுக்கப்பட்டுவிட்டன. ஜிஎஸ்டியால் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில்களை பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டது. 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் கல்விக்கு குறைவாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை மத்திய அரசு பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் விவசாயிகளை நாடாளுமன்றத்துக்குள் அனுமதிக்க மறுக்கிறது மத்திய அரசு. விவசாயிகளின் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச விலையை உறுதி செய்ய சட்டமாக்க தவறிவிட்டது மத்திய பாஜக அரசு. I.N.D.I.A. கூட்டணி ஆட்சியில் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச விலையை உறுதி செய்ய சட்டம் கொண்டுவருவோம். மத்திய பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு, விவசாயிகளுக்கு என எந்தவொரு அறிவிப்புமே இல்லை. நடுத்தர மக்களின் முதுகில் குத்திவிட்டது மத்திய பாஜக அரசு” எனக் கடுமையாகக் குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிக்க: மனைவியைக் காண அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்ற லாரி ஓட்டுநர்.. ஆந்திராவில் அரங்கேறிய விநோத சம்பவம்!